புதுச்சேரிக்கு உரிய நீர் பங்கீட்டை தர தமிழக அரசு மறுப்பு: அமைச்சர் லட்சுமிநாராயணன் குற்றச்சாட்டு


புதுச்சேரி: புதுச்சேரிக்கு உரிய நீர் பங்கீட்டை தர தமிழக அரசு மறுக்கிறது. இதுதொடர்பாக மத்திய நீர் ஆணையத்தில் புகார் தெரிவித்து தமிழகத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நீரை சட்டப்படி பெற முயற்சி எடுத்து வருகிறோம் என பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.

புதுவை சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு: அசோக்பாபு (பாஜனதா): புதுவை, தமிழ்நாடு இரு மாநிலங்களுக்கு இடையே நீர் பகிர்வு ஒப்பந்த திட்டம் எந்த நிலையில் உள்ளது? தமிழ்நாடு தற்போது எவ்வளவு நீர் வழங்குகிறது?

அமைச்சர் லட்சுமிநாராயணன்: புதுப்பிக்கப்பட்ட தென் பெண்ணையாறு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. தமிழக அரசு எந்தவித அளவும் நிர்ணயிக்காமல், எப்போதெல்லாம் சாத்தனுார் அணை கொள்ளளவு முழுமையாக சேமித்த பின் உபரி நீர் திறக்கப்படும்போது மட்டும் சொர்ணாவூர் வழியாக ஒன்றிரண்டு மாதம் பாகூர் ஏரியில் தண்ணீர் சேமிக்க உபயோகப்படுத்துகிறது.

ஜனவரி முதல் டிசம்பர் வரை எந்த மாதம், எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என ஒப்பந்தம் உள்ளது. இதன்படி ஆண்டுக்கு 44.67 டிஎம்சி நீர் புதுவைக்கு கிடைக்க வேண்டும். இந்த அளவு சாத்தனுார் அணைக்கு வரும் நீர் வரத்தை பொறுத்து மாறுபடும். ஆனால் புதுவை அரசு வேண்டுகோள் விடுத்தும் தமிழக அரசு தண்ணீர்கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புதுவை அரசு மத்திய நீர்வளத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அசோக்பாபு: ஒப்பந்தப்படி தண்ணீரை பெற வேண்டியது நம் உரிமை. அதை கேட்டுப்பெற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. தண்ணீர் தராதது குறித்து நீர் ஆணையத்தில் அரசு புகார் செய்ததா? லட்சுமிநாராயணன்: மத்திய நீர் ஆணையத்தில் புகார் செய்துள்ளோம். அவர்கள் நீர் பங்கீடு தொடர்பான கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். தமிழக அரசு புறக்கணித்ததால் கூட்டம் ரத்தானது. 2007ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் 2067 வரை உள்ளது.

இந்த ஒப்பந்தப்படி கிடைக்கும் நீர் மூலம் 6 ஆயிரம் எக்டேர் நிலம் பாசன வசதி, குடிநீர் வசதி பெறும். இதனால் மத்திய அரசிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். நமது புகாருக்கு பிறகு மத்திய நீர் ஆணையம் தமிழகத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுத்து நீர் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

x