உடல்நலக் குறைவால் உயிரிழந்த தாய்; விரக்தியில் மகனும் தூக்கிட்டு தற்கொலை - ஆவடி அருகே சோகம்


திருவள்ளூர்: ஆவடி அருகே திருமுல்லைவாயலில் உடல் நலக்குறைவால் தாய் உயிரிழந்ததால், மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே திருமுல்லைவாயல், தென்றல் நகர் கிழக்கு, 2-வது குறுக்கு தெருவைத் சேர்ந்தவர் வசந்தா (60). இவரது கணவர் ரத்தினவேலு பல ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இத்தம்பதியின் மகன் சங்கர் (35), திருமணமாகாத நிலையில், மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்; மகள் உமா மகேஸ்வரி (42), திருமணமாகி, திருமுல்லைவாயல் பகுதியில் தன் கணவருடன் வசித்து வருகிறார்.

இதற்கிடையே, மூச்சுத்திணறலால் அவதியுற்று வந்த வசந்தா மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 20-ம் தேதி இரவு வசந்தா, சங்கர் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். அதன் பிறகு அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் நேற்று முன் தினம் இரவு வசந்தா வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதுகுறித்து, தகவல் அறிந்த திருமுல்லைவாயல் போலீஸார், சம்பவ இடம் விரைந்து, பொதுமக்கள் உதவியுடன் உட்பக்கமாக பூட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, வசந்தா படுக்கையில் உயிரிழந்த நிலையில் கிடந்ததும், சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

அழுகிய நிலையில் இருந்த வசந்தா, சங்கர் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய முதல் கட்ட விசாரணையில், உடல் நலக்குறைவால் வசந்தா உயிரிழந்ததால், மனமுடைந்த சங்கர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

x