சென்னை: திருமண புகைப்படம் எடுத்தல், வீடியோ எடிட்டிங் தொடர்பாக தொழில் முனைவோர் பயிற்சி சென்னையில் நாளை முதல் 10 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள தமிழக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில், தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் திருமண புகைப்படம் எடுத்தல், வீடியோ எடிட்டிங் பயிற்சி மார்ச் 25 (நாளை) முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை 10 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி பயிற்சி வகுப்பு நடைபெறும்.
அரசு உதவிகள், மானியங்கள்: இதில் பாரம்பரிய புகைப்படம் எடுத்தல், திருமண புகைப்படம் எடுத்தல், புகைப் படத்தின் அடிப்படைகள், ஒளியமைப்பு, புகைப்பட நுட்பங்கள், உருவப் படங்களுக்கான நுட்பங்கள், ஆல்பம் வடிவமைப்பு, புகைப்பட மறுசீரமைப்பு, புகைப்பட குழுவை உருவாக்கி நிர்வகித்தல், புகைப்பட வணிகத்துக்கான வழிமுறைகள் ஆகியவை குறித்து கற்றுத் தரப்படும். இதற்கான அரசு உதவிகள், மானியங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படும்.
குறைந்தபட்ச கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி. 18 வயது நிரம்பிய ஆர்வம் உள்ள தொழில் முனைவோர் விண்ணப்பிக் கலாம். பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு குறைந்த வாடகையில் தங்கும் வசதி செய்து தரப்படும். கூடுதல் விவரங்களை www.editn.in என்ற இணையதளம் அல்லது 86681 08141, 86681 02600 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு அறியலாம். முன்பதிவு அவசியம்.