புதுச்சேரி: நீதிபதி ஆணையத்தின் பரிந்துரைக்கு பின்னர் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சுயேட்சை எம்எல்ஏ சிவசங்கர், "இனியும் காலம் தாழ்த்தாமல் உள்ளாட்சி தேர்தல்களை நடத்த அரசு முன்வருமா" என்று கேட்டதற்கு முதல்வர் ரங்கசாமி, "ஆம்" என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து சிவசங்கர், "மாநிலம் வளர்ச்சி பெறும். மக்கள் நீங்கள் நடத்துவீர்கள் என எதிர்பார்த்தார்கள். ஆண்டுக்கு ரூ.400 கோடி நிதி வரும்" என்றார். அதற்கு பேரவைத்தலைவர் செல்வம், அதுபோல் ஏதும் வராது. சிவசங்கருக்குதான் இந்த ஆசை உள்ளது" என்றார்.
முதல்வர் ரங்கசாமி இறுதியில் பதில் அளிக்கையில், "உள்ளாட்சித்தேர்தல் ஆட்சிக்கு வந்த பிறகு நடத்தி பார்த்தேன். தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு பரிந்துரை செய்ய புதுச்சேரி அரசு நீதிபதி சசிதரன் ஆணையத்தை நியமித்துள்ளது. ஆணையம் தனது பரிந்துரையை அளித்த பின்னர் இடஒதுக்கீட்டுக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும்" என்றார்.
அதற்கு." மக்கள் அதிகளவில் எதிர்பார்க்கிறார்கள்" என்று எம்எல்ஏ சிவசங்கர் கூறியதற்கு, பேரவைத்தலைவர் செல்வம், "எந்த மக்களும் எதிர்பார்க்கவில்லை அமருங்கள்" என கூறி அடுத்தக்கேள்விக்கு சென்றார்.