திருநெல்வேலி: மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து பொதுத் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தனர். அப்போது மாணவர்களிடையே திடீரென கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓடி வந்து அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர்.
ஆனால், மாணவர்களை கட்டுப்படுத்த முடியாததால் மூலைக்கரைப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸார் விரைந்து சென்று, மோதலை கட்டுப்படுத்தினர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து 4 மாணவர்களை பிடித்து இளஞ்சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி தேர்வு எழுத அனுமதித்து விடுவிக்கப்பட்டனர்.