போதை ஆசாமிகள் ரகளை: பழநி பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் அச்சம்!


பழநி: போதை ஆசாமிகளால் பழநி பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.

பழநி பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று கோவைக்குச் சென்ற அரசு பேருந்தை எடுக்கவிடாமல், அங்கு மதுபோதையில் வந்த இளைஞர் ஒருவர் தகராறில் ஈடுபட்டார். அப்போது, பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியை கையால் அடித்து உடைத்தார். மேலும், பேருந்தில் இருந்து நடத்துநரின் கையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி ரகளையில் ஈடுபட்டார். இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். பின்னர், அந்த இளைஞரை போலீஸில் ஒப்படைத்தனர். அந்த நபர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தை சிலர் வீடியோ எடுத்து சமூக வலை தளத்தில் பதிவிட்டனர். பழநி நகராட்சிக்கு உட்பட்ட வ.உ.சி பேருந்து நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பயணிகள் வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்துக்குள் எந்நேரமும் வலம் வரும் போதை ஆசாமிகள், போதை தலைக்கேறிய நிலையில் பேருந்து நிலையத்திலேயே படுத்து உறங்குகின்றனர். சில நேரங்களில் திறந்தவெளி மதுபானக் கூடமாகவும் பேருந்து நிலையம் மாறி விடுகிறது.

இதுபோன்ற போதை ஆசாமிகளால் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் அச்சத்தில் உள்ளனர். பேருந்து நிலையத்துக்குள் அடிக்கடி ரோந்து பணி மேற்கொள்ள போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x