கோயம்புத்தூர்: கோவை விமான நிலைய விரிவாக்க திட்டப் பணிகளுக்கு நிபந்தனையின்றி 470 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கியும் ஆமை வேகத்தில் பணிகள் நடப்பது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை என உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி ஆகிய வெளி நாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. விமான நிலைய எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு கடந்த 2010ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் 627 ஏக்கரில் விரிவாக்க திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஓடு பாதையின் நீளம் தற்போதுள்ள 9,809 அடியில் இருந்து 12,500 அடியாக அதிகரித்தல், புறப்பாடு பகுதிக்கு புதிய கட்டிடம் என்பன உள்ளிட்ட சர்வதேச விமான நிலையத்துக்கு ஏற்ப பயணிகளின் வசதிக்கு பல்வேறு நவீன உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
திட்டம் அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் முடங்கி கிடந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நில ஆர்ஜித பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. தற்போது 470 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது. விமான நிலைய ஆணையகத்திற்கு (ஏஏஐ) நிலங்களை வழங்குவதில் தமிழக அரசு சில நிபந்தனைகள் விதித்த நிலையில், தொழில் வளர்ச்சி மற்றும் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு நிபந்தனைகளை விலக்கிக்கொண்டு நிலத்தை ஒப்படைத்தது. இருப்பினும் விரிவாக்க திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பின் (கேஜிஎப்) துணைத் தலைவர் வனிதா மோகன், இயக்குநர் டி.நந்தகுமார் ஆகியோர் கூறும்போது, “கோவை விமான நிலையத்தில் தினமும் இட நெருக்கடி பிரச்சினை அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக, புறப்பாடு பகுதிக்கு புதிய கட்டிடம் விரைவில் கட்ட வேண்டியது மிக மிக அவசியமாகும். தற்போது பாதுகாப்புக் குழு தணிக்கை முடித்து விமானம் செல்ல காலதாமதம் ஏற்படுகிறது. சில விமானங்களை தவறவிடும் அவல நிலையும் காணப்படுகிறது. சர்வதேச போக்குவரத்து அதிகரிக்க ஓடுபாதை நீளம் 12 ஆயிரம் அடியாக அதிகரிப்பது அடிப்படை. கோவை வளர்ச்சிக்கு உதவும் வகையில் விரைந்து பணிகளை மேற்கொள்ள ஏஏஐ நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
மாற்றாந்தாய் மனப்பான்மை: கோவை எம்.பி கணபதி ராஜ்குமார் கூறும்போது, “கோவை விமான நிலைய வளர்ச்சிக்கு உதவும் வகையில் தமிழக முதல்வர் நிபந்தனைகளை முற்றிலும் நீக்கி ஏஏஐ நிர்வாகத்திடம் வழங்கியுள்ளார். இருப்பினும் மிகவும் மந்த கதியில் விரிவாக்க திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுவது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் மாற்றாந் தாய் மனப்பான்மையே இதற்கு காரணம். தற்போது தான் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு டெண்டர் வெளியிட்டுள்ளனர். புறப்பாடு பகுதியில் தினமும் ஏற்படும் நெரிசலால் பயணிகள் திண்டாடுகின்றனர். ஓடு பாதை நீளத்தை விரைவில் அகலப்படுத்தினால்தான் சர்வதேச விமான போக்குவரத்து அதிகரிக்கும்” என்றார்.
கோவை விமான நிலைய இயக்குநர் (பொறுப்பு) சம்பத்குமார் கூறும்போது, “கோவை விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கு 627 ஏக்கர் நிலம் தேவை. இதில் தற்போது 470 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு நிபந்தனைகள் இல்லாமல் வழங்கியுள்ளது. சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. புறப்பாடு பகுதியில் நிலவும் பிரச்சினை நன்கு தெரியும். அதற்கு மாற்றாக தற்காலிக புறப்பாடு டெர்மினல் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
பணி மேற்கொள்ள முன்வந்த நிறுவனம் திட்டத்தை நடைமுறைப் படுத்த சாத்தியமில்லை என கூறி விலகிக் கொண்டது. புறப்பாடு பகுதிக்கு புதிய கட்டிடம் கட்ட 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகும். தற்போது கோவையில் தினமும் 35 விமானங்கள் இயக்கப்படுகின்றன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இருக்கும் இடத்தில் முடிந்த வரை பயணிகளுக்கு உதவிகளை செய்து வருகிறோம்” என்றார்.