சென்னை: ‘வடசென்னை-3 அனல்மின் நிலையத்தில் வணிக பயன்பாட்டுக்கான மின்னுற்பத்தி வரும் மே மாதம் தொடங்கப்படும்’ என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் ரூ.10,158 கோடி செலவில் 800 மெகாவாட் திறனில் வடசென்னை-2 அனல்மின் நிலையத்தை மின்வாரியம் அமைத்துள்ளது. இதன் கட்டுமான பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பணிகள் முடிந்து 2024 மார்ச் 7-ம் தேதி சோதனை ரீதியிலான மின்னுற்பத்தி தொடங்கப்பட்டது.
சோதனை மின்னுற்பத்தி தொடங்கிய நிலையில், முழு திறனில் 72 மணி நேரம் தொடர்ந்து மின்னுற்பத்தி செய்யப்பட வேண்டும். அதன்பின், வணிக ரீதியாக பயன்பாட்டுக்கு வந்ததாக அறிவிக்கப்படும். வடசென்னை-3 மின்நிலையத்தில் சோதனை உற்பத்தி தொடங்கிய நிலையில், தினமும் சராசரியாக 500 முதல் 600மெகாவாட் மின்னுற்பத்தி செய்த நிலையில், ஜுன் 27-ம் தேதி முழு திறனில் மின்னுற்பத்தி செய்யப்பட்டது. பின்னர், மின்னுற்பத்தி குறைக்கப்பட்டது.
மின்நிலையத்தில் சோதனை மின்னுற்பத்தி தொடங்கி ஓராண்டு முடிந்த நிலையில் இன்னும் வணிக பயன்பாட்டுக்கு வரவில்லை.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘வடசென்னை-3 அனல்மின் நிலையத்தில் மின்னுற்பத்தி தொடங்கிய பின், பல்வேறு தொழில்நுட்ப பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதை சரி செய்ய வேண்டி உள்ளதால், வணிக மின்னுற்பத்தி தொடங்க தாமதமாகிறது. எனவே, இப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு வரும் மே மாதம் வணிக மின்னுற்பத்தி தொடங்கப்படும்’’ என்றனர்.