தொழில் உரிமம் பெறும் நடை​முறை​யில் தளர்வு: ஓராண்டுக்கு தொழில் உரிமம் பெற்​றுக்​கொள்ள நடவடிக்கை


சென்னை: சென்னை மாநகராட்சியில் தொழில் உரிமம் பெறும் நடைமுறையை தளர்த்தி, ஓராண்டுக்கு தொழில் உரிமம் பெற்றுக்கொள்ள வழிவகை செய்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் 2023, விதி 289(1)-ன்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில்புரிவோர், மாநகராட்சி ஆணையரிடம் கட்டாயம் தொழில் உரிமம் பெற வேண்டும். மேலும், விதி 290-ன்படி புதியதாக எடுக்கப்படும் மற்றும் புதுப்பிக்கப்படும் தொழில் உரிமங்கள் 3 ஆண்டுகள் வரை செல்லத்தக்கவையாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதை ஓராண்டாக குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா முதல்வர் ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோரிடமும் மனு அளித்து வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் வணிக உரிமம் பெறும் விதிகளை சென்னை மாநகராட்சி தளர்த்தியுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வணிகர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் விதி எண். 300ஏ-ன்படி தொழில் உரிமம் ஓராண்டு அல்லது 2 ஆண்டு அல்லது 3 ஆண்டு என தொழில் உரிமத்தினை அவரவர் விருப்பம் போல் புதுப்பித்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதை பயன்படுத்தி வணிகர்கள் தங்களது உரிமத்தை இணையதளம் வாயிலாகவும் (chennaicorporation.gov.in), இ-சேவை மையத்திலும், மண்டல அலுவலகங்களிலும் மற்றும் சம்மந்தப்பட்ட உரிமம் ஆய்வாளரிடம் கையடக்க கருவி மூலமாகவும் தொழில் உரிமத்தை மார்ச் 31-ம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-25619305 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

x