நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ முகாமில் குதிரை சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் உயர் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு சிறப்புப் பயிற்சியாக ஜிம்கானாவில் குதிரை சவாரிப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், குன்னூரில் மவுன்டன் ஜிம்கானா என்ற பெயரில் ஆண்டுதோறும் குதிரை சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இதன்படி, நேற்று நடைபெற்ற விழாவில், ராணுவப் பயிற்சிக் கல்லூரி கமாண்டென்ட் வீரேந்திரவாட்ஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். தேசியக்கொடி மற்றும் பயிற்சிக் கல்லூரியின் கொடியை வீரர்கள் குதிரைகளில் எடுத்து வந்தனர். தொடர்ந்து, அதிகாரிகளின் குதிரை சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
குதிரைகளுக்கான ஓட்டப்பந்தயம், ஆசர்லே, 5 ஜம்பிங், ஷோ ஜம்பிங், டிரிக் ஜம்பிங் என பல்வேறு போட்டிகளில் வீரர்கள் அசத்தினர். குதிரைகளில் வேகமாக வந்து, ஈட்டியைக் கொண்டு துல்லியமாக ஒரு பொருளை குத்தி எடுக்கும் போட்டி அனைவரையும் கவர்ந்தது. குதிரைகள் மூலம் நெருப்பு வளையத்தை தாண்டுதல், மோட்டார் சைக்கிள், ஜீப் ஆகியவற்றை தாண்டுதல் உள்ளிட்ட சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குதிரையில் இருந்தவாறே ஈட்டி வீசும் போட்டியும் நடைபெற்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு கேடயம் மற்றும் பதக்கங்களை ராணுவப் பயிற்சி கமாண்டென்ட் லெப்டினென்ட் ஜென்ரல் வீரேந்திரவாட்ஸ் வழங்கினார்.