ஒப்பந்த நிறுவன அலுவலரிடம் லஞ்சம் பெற்ற புதுச்சேரி பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை மூலம் ரூ.100 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக சிபிஐ மற்றும் வருமான வரித் துறைக்கு தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், புதுச்சேரி பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன் காரைக்காலுக்கு நேற்று முன்தினம் வந்து, கடற்கரையில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். அவருடன் காரைக்கால் கண்காணிப்புப் பொறியாளர் சந்திரசேகரன், செயற் பொறியாளர்கள் சிதம்பரநாதன், மகேஷ் ஆகியோரும் இருந்தனர். அப்போது, மன்னார்குடியைச் சேர்ந்த ஒப்பந்த நிறுவனஅலுவலர் ஒருவர், பொதுப்பணித் துறை ஒப்பந்தப் பணிகளுக்காக அதிகாரிகளிடம் லட்சக்கணக்கான ரூபாயை லஞ்சமாக கொடுக்க முற்பட்டபோது, அவர்களை சிபிஐ அதிகாரிகள் பிடித்தனர்.
இதற்கிடையே, புதுச்சேரியில் உள்ள தீனதயாளன் வீடு, காரைக்கால் பட்டம்மாள் நகரில் உள்ள சிதம்பரநாதன் வீடு ஆகிய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சிதம்பரநாதன் வீட்டிலிருந்து லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கம், நகைகள், ஆவணங்களும், தீனதயாளன் வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. விசாரணைக்குப் பின்னர் சந்திரசேகரன், மகேஷ் ஆகியோர் மட்டும் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, தலைமைப் பொறியாளர் தீனதயாளன்(58), செயற் பொறியாளர் சிதம்பரநாதன்(54), ஒப்பந்த நிறுவன அலுவலர் ஆகியோரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள், காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். புதுச்சேரி மாநில பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட 3 பேர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநில அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயரதிகாரி அறைக்கு `சீல்' - இதற்கிடையே, சிபிஐ துணைக் கண்காணிப்பாளர் ஜெயசீலன் தலைமையிலான அதிகாரிகள் புதுச்சேரியில் உள்ள பொதுப்பணித் துறை தலைமை அலுவலகத்தில் உள்ள தலைமைப் பொறியாளர் தீனதயாளன் அறையில் நேற்று சோதனையிட்டனர். பின்னர், அந்த அறையைப் பூட்டி சீல் வைத்தனர். மேலும், தலைமைப் பொறியாளர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் விசாரிக்கப்பட்டது.