காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து உற்பத்திப் பொருட்களை கொண்டு செல்லவும், மூலப்பொருட்களை கொண்டு வரவும் வாலாஜா பாத் - படப்பை சாலையும், சிங்க பெருமாள் கோயில் - ஸ்ரீபெரும்புதூர் சாலையும் 6 வழிச் சாலையாக மாற்றப்பட்டது. மேலும் இந்த இரு சாலைகளும் சந்திக்கும் ஒரகடம் பகுதியில் ரூ.20.82 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்பட்டது.
தொழிற்சாலைகளில் உற்பத்தி பொருட்கள் அதிகரித்ததன் விளைவாக இந்த மேம்பாலத்தில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை ஏற்றி வரும், உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்லும் அதிக எடை கொண்ட வாகனங்களும் இந்த பாலத்தின் மீது அதிகம் சென்றன. இதனால் மேம்பாலம் சேதமடைந்து அந்த பாலத்தில் இருந்த இரும்புக் கம்பிகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. அதிக எடை கொண்ட வாகனங்கள் செல்லும் போது அதிர்வுகள் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இந்நிலையில் இதுதொடர்பாக ஏற்கெனவே நெடுஞ்சாலைத் துறையினர் ஐ.ஐ.டி. வல்லுநர் குழுவை அழைத்து வந்து இந்த பாலத்தை சீரமைப்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். ஆனால் சீரமைப்பதற்கான நடவடிக்கை எதுவும் துரிதப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் இந்த பாலம் அதிகம் சேதமடைந்ததை தொடர்ந்து பாலத்தின் ஒரு பகுதியில் தடுப்புகள் அமைத்து அதன் மூலம் வாகனங்கள் செல்லாவதவாறு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரே பகுதியின் வழியாக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பாலத்தை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.