ஐபிஎல் கிரிக்கெட் போட்டியையொட்டி, பயணிகள் வசதிக்காக, வேளச்சேரி - சிந்தாதிரிப்பேட்டை இடையே சிறப்பு மின்சார ரயில்கள் மார்ச் 23, 28, ஏப்.11, 25, 30, மே 12 ஆகிய 6 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது. மாநகரப் போக்கு வரத்துக் கழகம் சார்பில் இலவச பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் மார்ச் 23, 28, ஏப்.11, 25, 30, மே 12 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதை முன்னிட்டு, சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே 3 மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
வேளச்சேரியில் இருந்து இரவு 10.55 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு, சேப்பாக்கத்தை இரவு 11.25 மணிக்கு அடையும். அங்கிருந்து புறப்பட்டு, நள்ளிரவு 11.45 மணிக்கு சென்னை கடற்கரையை அடையும். அதேபோல, சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10 மணிக்கு ஒரு ரயில் புறப்பட்டு, சேப்பாக்கத்தை இரவு 10.10 மணிக்கு அடையும். அங்கிருந்து புறப்பட்டு, இரவு 10.45 மணிக்கு வேளச்சேரியை அடையும்.
மற்றொரு சிறப்பு ரயில் சேப்பாக்கத்தில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 12.05 மணிக்கு வேளச்சேரியை அடையும். இந்த சிறப்பு ரயில் பெருங்குடி, தரமணி, திருவான்மியூர், இந்திரா நகர், கஸ்தூரி பாய் நகர், கோட்டூர்புரம், பசுமை வழிச்சாலை, மந்தை வெளி, திருமயிலை, முண்டக்கண்ணி அம்மன் கோவில், கலங்கரை விளக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, பார்க் டவுன், கோட்டை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்தத் தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச பேருந்து ஏற்பாடு: மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபு சங்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்திடம் பயணக் கட்டணம் பெற்றுக் கொண்டதன் அடிப்படையில், கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் பயணிகள், போட்டி நடைபெறும் 3 மணி நேரத்துக்கு முன்பும், பின்பும் பேருந்துகளில் (ஏசி பேருந்து தவிர) கட்டணமின்றி பயணிக்கலாம்.
போட்டிக்குப் பின் அண்ணா சதுக்கம், ஓமந்தூரார் மருத்துவமனை, சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து பேருந்துகள் இயக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்ணா சிலை முதல் எம்.ஏ. சிதம்பரம் மைதானம் வரை சிற்றுந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.