முல்லை பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையக் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
2014-ல் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம், பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த போதிலும், பேபி அணையைப் பலப்படுத்த விடாமல் கேரள அரசு இடையூறு செய்துவருகிறது.
இந்நிலையில், 2024 அக். 1-ம் தேதி இந்த அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு, ஆணையத் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அணை தொடர்பான பிரச்சினைகளுக்கு 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையக் குழுவினர் முதல்முறையாக நேற்று முல்லை பெரியாறு அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். ஆணையத் தலைவர் அனில் ஜெயின், தமிழக நீர்வளத் துறை செயலர் மங்கத்ராம் சர்மா, தொழில்நுட்ப நிபுணர் சுப்பிரமணியன், கேரள அரசின் கூடுதல் தலைமைச் செயலர் டிங்கு பிஸ்வால், கேரள நீர்வளத் துறை முதன்மைப் பொறியாளர் பிரியேஷ், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய ஆராய்ச்சியாளர் விவேக் திரிபாதி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய பேரழிவு மற்றும் பின்னடைவுப் பிரிவு இயக்குநர் ராகுல் குமார் சிங், உதவி இயக்குநர் விபோர் பஹேல், தென் மண்டல இயக்குநர் கிரிதரன் ஆகியோர் உடனிருந்தனர்.
தேக்கடி படகுத் துறையில் இருந்து படகு முலம் அணைப் பகுதிக்கு சென்ற குழுவினர், பிரதான அணை, பேபி அணை மற்றும் அணையை பலப்படுத்த தடையாக உள்ள மரங்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டனர். அணையின் மேல்பகுதியில் பொருத்தியுள்ள நிலநடுக்கத்தை கணக்கிடும் ‘சீஸ்மோகிராப்’ கருவியில் பதிவாகியுள்ள நில அதிர்வுகள், கேலரியில் இருந்து நீர்க்கசிவு நிலை குறித்தும் ஆய்வு செய்தனர். பின்னர் தேக்கடி திரும்பிய குழுவினர், செப்பனிட வேண்டிய வல்லக்கடவு வனப் பாதையையும் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, தேக்கடியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவு வனவிலங்கு சரணாலயக் கூட்ட அரங்கில், தமிழக, கேரள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, முல்லை பெரியாறு அணையின் பலம் மற்றும் பராமரிப்பு குறித்து விவாதித்தனர். ஆய்வு குறித்த அறிக்கையை விரைவில் உச்ச நீதிமன்றத்தில் குழு தாக்கல் செய்யவுள்ளது. இந்த அறிக்கை அடிப்படையில் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவைப் பொறுத்து பேபி அணையை பலப்படுத்தும் பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.