ஈரோடு: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கொடிமுடி பேரூராட்சித் தலைவர் மீது நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தின் முடிவு அறிவிக்கப்படாததால் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சியில் திமுக சார்பில் 8, காங்கிரஸ் 3, அதிமுக 1, சுயேச்சை 3 என மொத்தம் 15 கவுன்சிலர்கள் உள்ளனர். பேரூராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த திலகவதி சுப்பிரமணியம் பதவி வகித்து வருகிறார்.
பேரூராட்சி தலைவர் திலகவதி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்திய கவுன்சிலர்கள், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்சித்தனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், பேரூராட்சித் தலைவர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) ரமேஷ்குமார் முன்னிலையில் நேற்று பேரூராட்சிக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தை தலைவர் திலகவதி மற்றும் கவுன்சிலர்கள் சரவணன், முருகானந்தம் ஆகிய மூவரும் புறக்கணித்த நிலையில், மீதமுள்ள திமுக, அதிமுக ,காங்கிரஸ் உள்ளிட்ட 12 கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
பேரூராட்சி தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், 12 கவுன்சிலர்களும் வாக் களித்தனர். தொடர்ந்து செயல் அலுவலர் ரமேஷ்குமார் அங்கிருந்து புறப்பட்டார். அதே நேரத்தில், முடிவை அறிவிக்கக்கோரி 12 கவுன்சிலர்களும் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, கவுன்சிலர்கள் கூறுகை யில், ‘நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது தொடர்பான தீர்மான நகலை செயல் அலுவலர் கொடுக்காத தால் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளோம்’ என்றனர்.
இதுகுறித்து அதிகாரி கள் கூறும்போது, ‘சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், அதன் முடிவுகளை உயரதிகாரிகள் மூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளோம்’ என்றனர்.