மக்களின் உயிரோடு முதல்வரும், அமைச்சர்களும் விளையாடுகிறார்கள்: நாராயணசாமி குற்றச்சாட்டு


புதுச்சேரி: சுகாதாரம், கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்குவதாக முதல்வர் கூறுகிறார். சுகாதாரமாக மக்களை வைத்திருக்க என்ன செய்துள்ளார். மக்களின் உயிரோடு முதல்வரும், அமைச்சர்களும் விளையாடுகிறார்கள் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் குடிநீர், சாக்கடை, குப்பை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் 24 மணி நேர காத்திருப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சின்ன மணிகூண்டு எதிரில் இன்று நடைபெற்றது. முத்தியால்பேட்டை தொகுதி காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் ஈரம் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மஞ்சள் ரேஷன் கார்டு உள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000, சிவப்பு ரேஷன் கார்டு உள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,500 உதவித்தொகை கொடுக்க போகிறோம் என்று முதல்வர் கூறுகிறார். உதவி தொகை கொடுப்பது இருக்கட்டும். முதலில் மக்கள் உயிரோடு இருக்க வேண்டும்.

குடிநீர், சாக்கடை, குப்பை வாருதல் உள்ளிட்ட மக்கள் அடிப்படை பிரச்னைகளை கவனிக்காமல், ரெஸ்ட்ரோ பார்களை திறந்து சாராய ஆறு ஓட விட்டுள்ளனர். இதனால் மக்கள் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். அரசிடம் மக்கள் வேலை கேட்கவில்லை. விலை உயர்ந்துவிட்டது, அதனை கட்டுப்படுத்துங்கள் என்று கேட்கவில்லை. உயிரோடு இருப்பதற்கு சுத்தமான குடிநீர் தான் மக்கள் கேட்கிறார்கள். இதை செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை.

சுகாதாரம், கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்குவதாக முதல்வர் கூறுகிறார். சுகாதாரமாக மக்களை வைத்திருக்க என்ன செய்துள்ளார். மக்களின் உயிரோடு முதல்வரும், அமைச்சர்களும் விளையாடுகிறார்கள். மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்ற வேலையை செய்கிறார்கள். இதை தடுத்து நிறுத்துவது யார்? இப்பிரச்சினையை தொகுதி சுயேட்சை எம்எல்ஏ தான் தீர்க்க வேண்டும். அவர் எந்த கட்சியையும் சாராதவர். மக்களுக்கு செய்யாமல் நம்முடைய போராட்டத்தை நிறுத்த அமைச்சரிடம் சிபாரிசு செய்கிறார். இதையும் காவல்துறை ஏற்றுக் கொள்கிறது.

புதுச்சேரியில் ஆட்சியாளர்கள் மக்களை கவனிப்பார்களா? என்றால் இல்லை அவர்களே கவனித்துக் கொள்வார்கள். முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு மட்டும்தான் கொடுப்பார். எதையும் செய்ய மாட்டார். இப்போது, மஞ்சள் ரேஷன் கார்டுக்கு ரூ.1,000 கொடுக்கப்படும் என அறிவித்துள்ளார். நிதி இல்லாமல் எப்படி உதவித்தொகை கொடுக்க முடியும். இதற்கு நிதி எங்கு இருக்கிறது.

குடிநீரை சுத்திகரித்தால் எல்லாருக்கும் கிடைக்கும். அதை செய்யாமல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேனை யார் யார் வீட்டுக்கு, எத்தனை நாட்கள் கொடுப்பார்கள். குடிநீரை எல்லோரும்தான் குடிக்கிறார்கள். இதனால் எல்லோருக்கும்தான் கொடுக்க வேண்டும். இந்த ஆட்சி மக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யவில்லை. ஆனால், இதை செய்தோம், அதை செய்வோம் என்பார்கள். மக்கள் உயிர் வாழ சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தர வேண்டியது அரசின் கட்டமை. இதை செய்யாததால் போராட்டம் நடத்துகிறோம். இதை அடக்க பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x