வாணியம்பாடி பகுதிகளில் நூதன மோசடி: காஸ் அடுப்பு சரிபார்ப்பதாக கூறி பணம் வசூல்!


வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் பகுதியில் காஸ் அடுப்பு சரிபார்ப்பதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்த நபர்களிடம் நேற்று காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

வாணியம்பாடி: வாணியம்பாடியில் காஸ் அடுப்பு, குழாய் இணைப்பு சரி பார்ப்பதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்த நபர்களை பிடித்து காவல்துறையிடம் பொதுமக்கள் நேற்று ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியில் தனியார் காஸ் ஏஜென்சி செயல்பட்டு வருகிறது. இந்த ஏஜென்சி மூலம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் காஸ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதில், வாணியம்பாடி வட்டத்துக்கு உட்பட்ட திம்மாம்பேட்டை, அலசந்தாபுரம், அம்பலூர், எக்லாஸ்புரம், வடக்குப்பட்டு, தேவஸ்தானம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் ஆயிரக்கணக்கான இந்தியன் காஸ் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஸ் ஏஜென்சி சார்பில் அதன் ஊழியர்கள் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் வீட்டுக்கு சென்று, காஸ் அடுப்பு முறையாக பராமரிக்கப்படுகிறதா? ரெகுலேட்டர் சரியாக உள்ளதா? காஸ் சிலிண்டர் குழாய் இணைப்பு மற்றும் அடுப்பு ஆகியவற்றை சரி பார்த்து, அதற்கான தொகையும் வசூலித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக வாணியம்பாடி சுற்றியுள்ள கிராமங்களில் தருமபுரி பகுதியைச் சேர்ந்த விக்ரம் மற்றும் பிரதாப் ஆகியோர் கொண்ட 5-க்கும் மேற்பட்டோர் காஸ் அடுப்பு பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய தனியார் காஸ் ஏஜென்சி சார்பில் தங்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறி ஒவ்வொரு வீட்டுக்கும் நேரில் சென்று காஸ் அடுப்பு சரி பார்த்ததாகவும், குழாய் இணைப்பு சரி செய்வதாக கூறி பொதுமக்களிடம் இருந்து ரூ. 100 முதல் ரூ.250 வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் இந்த கும்பல் வீடு தோறும் வசூல் வேட்டையில் ஈடுபட்டதால், சந்தேகமடைந்த பொதுமக்கள் தனியார் காஸ் ஏஜென்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, நாங்கள் யாரிடமும் பணம் வாங்க சொல்லவில்லையே என கூறியுதாக தெரிகிறது.

உடனே, பொதுமக்கள் காஸ் அடுப்பு சரிபார்க்க வந்த நபர்களை பிடித்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு வந்த காவல் துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களிடம் அடையாள அட்டைகளை பரிசோதனை செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதில், அந்த நபர்கள் வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு சென்று காஸ் அடுப்பு சரிபார்ப்பதாக கூறி அவர்களிடம் பணம் வசூல் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, தனியார் காஸ் ஏஜென்சி நிறுவனத்திடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x