எலுமிச்சை கிலோ ரூ.50-க்கு விற்பனை: புளியங்குடி சந்தைக்கு வரத்து அதிகரிப்பு!


புளியங்குடி எலுமிச்சை சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

தென்காசி: புளியங்குடி சந்தைக்கு எலுமிச்சை வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கோடை காலத்திலும் விலை உயராமல் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் எலுமிச்சை சாகுபடி செய்து வருகின்றனர்.

பறிக்கப்படும் எலுமிச்சை பழங்களை புளியங்குடி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவருகின்றனர். இங்கிருந்து கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின்பல்வேறு மாவட்டங்களுக்கும் எலுமிச்சை பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

வழக்கமாக கோடை காலத்தில் எலுமிச்சை பழங்களின் தேவை அதிகமாக இருக்கும். ஆனால், விளைச்சல் அதிக அளவில் இருக்காது என்பதால் விலை அதிகரிக்கும். கடந்த சில ஆண்டுகளில் கோடை காலத்தில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் 100 ரூபாய் முதல் அதிகபட்சமாக 200 ரூபாய் வரை விற்பனையானது. ஆனால், இந்த ஆண்டில் கோடை காலத்திலும் விளைச்சல் அதிகமாக உள்ளது. இதனால் எலுமிச்சை பழங்களின் விலை அதிகரிக்கவில்லை. புளியங்குடி சந்தையில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.40 முதல் 50 வரை விற்பனையானது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: கோடை காலத்தில் எலுமிச்சை விளைச்சல் சற்று குறைவாகவே இருக்கும். ஆனால், இந்த ஆண்டு கோடை காலத்தில் விளைச்சல் அதிகமாக உள்ளது. புளியங்குடி சந்தைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 200 டன் வரை எலுமிச்சை வரத்து உள்ளது. வரத்து அதிகமாக இருப்பதால் விலை அதிகரிக்கவில்லை. ஒரு கிலோ எலுமிச்சை ரூ.40 முதல் 50 ரூபாய் வரை விற்பனையாகிறது.

மேலும், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கோடை காலத்தில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் வியாபாரம் குறைந்துள்ளது. மற்ற மாவட்டங்கள், கேரளாவுக்கு அதிக அளவில் எலுமிச்சை பழங்கள் விற்பனையாகின்றன. குளிர் காலத்தில் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.20 வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

இப்போது உள்ள விலை விவசாயிகளுக்கு ஓரளவு லாபத்தை கொடுக்கும். எலுமிச்சை விலை குறைவாக உள்ள காலங்களில் பாதுகாத்து சேமித்து வைக்க குளிர்பதனக் கிடங்கு, மதிப்புகூட்டு பொருட்கள் தயாரிக்க ஆலைகள் உருவாக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது” என்றனர்.

x