ராஜபாளையம்: ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் எதிரே கண்மாயில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ராஜபாளையம் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் புதிய பேருந்து நிலையம் எதிரே பெரியாதிகுளம் கண்மாய் உள்ளது. சஞ்சீவி மலை, மலையடிப்பட்டி, டிபி மில்ஸ் சாலை, சங்கரபாண்டியபுரம் தெரு, சிவகாமிபுரம் தெரு, தெற்கு வைத்தியநாதபுரம், அம்பலபுலி பஜார், சிங்கராஜா கோட்டை, முகில்வண்ணம் பிள்ளை தெரு, சங்கரன்கோவில் முக்கு, புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீரானது, ஓடை வழியாக பெரியாதிகுளம் கண்மாயில் சேர்கிறது. இந்த கண்மாய் மூலம் 100 ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாகவும் உள்ளது.
இந்நிலையில், பேருந்து நிலையம் எதிரே கண்மாயில் கட்டிடக் கழிவுகள் மற்றும் குப்பையை கொட்டி வருகின்றனர். மேலும், இங்கு கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் வாகனத்தில் வந்து மருத்துவக் கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிச் செல்கின்றனர். அதில் பயன்படுத்திய ஊசி, முகக்கவசம், காலாவதியான மருந்துகள், கவச உடை, பஞ்சு உள்ளிட்ட பொருட்கள் உள்ளதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கண்மாயில் கொட்டப்பட்டு உள்ளதால் நீர் மாசடைவதுடன், கால்நடைகள் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
எனவே, மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதுடன், கழிவுகளை கொட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.