சிவகங்கை: மானாமதுரை அருகே மயானத் தொழிலாளி குடும்பத்தினர் இடிந்த வீட்டில் வசித்து வருகின்றனர். மேலும் சொந்த இடமில்லாததால் இலவச வீடு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டையைச் சேர்ந்த மயானத் தொழிலாளி மைக்கல்ராஜ் (60). இவரது மனைவி போதும்பொண்ணு (55). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் கணவரால் கைவிடப்பட்டு, ஒரு குழந்தையுடன் அவர்களுடன் வசித்து வருகிறார். மற்றவர்கள் திருமணமாகி சென்றுவிட்டனர்.
மைக்கேல்ராஜ் குடும்பத்தினருக்கு சொந்த இடம் இல்லாததால் கோயில் இடத்தில் ஓட்டு வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். ஆனால் அந்த வீட்டின் ஒரு சுவர் சமீபத்தில் பெய்த மழையில் இடிந்து விழுந்தது. இதனால் சேலை போன்றவற்றால் மறைவை ஏற்படுத்தி குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கலைஞர் கனவு இல்லத் திட்டம், பிரதமர் குடியிருப்புத் திட்டத்தில் அவர்கள் வீடு கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால் அவர்களுக்கு சொந்த இடம் இல்லாததால் இலவச வீடு கட்ட அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்துடன் வசித்து வருகின்றனர். தங்களுக்கு இலவச வீட்டுமனையும், வீடும் கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து போதும்பொண்ணு கூறியதாவது: சொந்த இடம் இல்லாததால் அனுமதி கிடைக்கவில்லை. தற்போது அரசு அறிவித்த இலவச பட்டா வழங்கும் திட்டத்தில் எங்களுக்கு இடம் ஒதுக்கி, வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.