சென்னை: மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முயற்சிகளை எடுத்த சாதனைக்காக கவுரவிக்கப்படாமல், அந்த மாநிலங்கள் தங்களின் பிரதிநிதித்துவத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளன என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
தொகுதி மறுவரையறை தொடர்பான ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ ஆலோசனைக் கூட்டம் சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட 7 மாநிலங்களின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள மாநிலங்கள் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முயற்சிகளை எடுத்துள்ளன. ஆனால் அந்த சாதனைக்காக கவுரவிக்கப்படாமல், அந்த மாநிலங்கள் தங்களின் பிரதிநிதித்துவத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளன.
பல பத்தாண்டுகளாகவே நாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் பல்வேறு கொள்கைகளை வகுத்து, அதை செயல்படுத்த போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தேசம் நிலையான மக்கள் தொகை பெருக்கத்தை இலக்காகக் கொண்ட போது அதற்கேற்ப நாம் மாநிலங்களில் மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்தோம். இன்னும் சில மாநிலங்களில் மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக உள்ளது. ஆனால் அதைக் கட்டுப்படுத்தி ஒரு சாதனையை நாம் செய்துள்ளோம். அதற்காக இப்போது அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்கும் சூழலில் உள்ளோம்.” என்று பேசினார்.