சென்னை: மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை என்பதை ஏற்க முடியாது. அவ்வாறு நடந்தால் தமிழகம் 8 முதல் 12 இடங்களை இழக்கும். எண்ணிக்கை தான் அதிகாரம். ஒருவேளை நமக்கான தொகுதிகளை நாம் இழந்தால் சொந்த நாட்டிலேயே அதிகாரமற்றவர்களாக இருக்க நேரிடும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை தொடர்பான ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ ஆலோசனைக் கூட்டம் சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருறுகிறது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட 7 மாநிலங்களின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘தொகுதி மறுவரையறையை தமிழகம் எதிர்க்கவில்லை. அதனை நியாயமாக நடத்தவே வலியுறுத்துகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்கள் அதற்கான பரிந்துரைகளை முன்வைக்க வேண்டுகிறேன். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை என்பதை ஏற்க முடியாது. அவ்வாறு நடந்தால் தமிழகம் 8 முதல் 12 இடங்களை இழக்கும். எண்ணிக்கை தான் அதிகாரம். ஒருவேளை நமக்கான தொகுதிகளை நாம் இழந்தால் சொந்த நாட்டிலேயே அதிகாரமற்றவர்களாக இருக்க நேரிடும்.
பல்வேறு மொழிகள், பண்பாடுகள், உடைகள், வழிபாட்டு நம்பிக்கைகள் உள்ளிட்டவை கொண்டதுதான் இந்தியா. அப்படியிருக்க மாநிலங்கள் சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டால்தான் இந்தியாவின் உண்மையான கூட்டாட்சி உருவாகும். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மூலம் கூட்டாட்சி அமைப்புக்கு சோதனை வந்துள்ளது.
மேலும், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை என்பது தென் மாநிலங்களை கடுமையாக பாதிக்கும். காலம் காலமாக பாதுகாக்கப்படும் நமது சமூக நீதி பாதிக்கப்படும். அதனைத் தடுக்க இந்திய ஜனநாயகத்தை காக்க நாம் இங்கு ஒன்று கூடியுள்ளோம்.
இவ்விவகாரத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விளக்கம் தெளிவாக இல்லை. குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது அதனாலேயே முன் எப்போதும் இல்லாத ஒற்றுமையுடன் தமிழகம் ஒன்றிணைந்துள்ளது. இதே ஒற்றுமையுடன் இந்த அரங்கில் கூடியுள்ள அனைவரும் செயல்பட வேண்டும்” முதல்வர் ஸ்டாலின் பேசினார்.