‘தொகுதி மறுவரையறை கூட்டம் என நாடகம் போடுகிறார்’ - கருப்பு சட்டையோடு அண்ணாமலை சீற்றம்!  


சென்னை: பிரச்சினை இருப்பதாக கற்பனை செய்துகொண்டு நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என்று சொல்லி தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் நாடகம் நடத்துகிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தைக் கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டார்.

சென்னை பனையூரில் போராட்டத்தில் ஈடுபட்ட அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, ‘தமிழகத்துக்கு அண்டை மாநிலங்களுடன் தீர்க்கப்படாத நீண்ட கால பிரச்சினைகள் உள்ளன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், கேரள மாநிலத்தோடு முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை, செண்பகவல்லி அணை பிரச்சினை, மருத்துவக் கழிவுகளைக் கொட்டும் பிரச்சினை உள்ளன.

கர்நாடக அரசுடன் நீண்ட காலமாக காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை உள்ளது. கூடவே, “யார் அனுமதி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம்” என்று அம்மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் சவால் விடுத்துள்ளார். அதேபோல் பந்திப்பூர் பகுதியில் இரவு நேர போக்குவரத்து தடையால் தமிழக மக்கள் சந்திக்கும் இன்னல்கள் உள்ளன. அதுமட்டுமின்றி கர்நாடகாவை ஒட்டிய ஒசூர் வளர்ச்சிக்கான பெங்களூருவின் பொம்மச்சந்திராவுக்கும், தமிழ்நாட்டின் ஒசூருக்கும் இடையேயான மெட்ரோ ரயில் திட்டம் கிடப்பில் உள்ளது. இப்படியாக பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

இதுவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 முறை கேரளா சென்றுள்ளார். அவர் ஒருமுறையாவது மாநில உரிமைகளைப் பற்றி பேசியிருக்கிறாரா?. பகிரங்கமாக மேகேதாட்டு விவகாரத்தில் சவால் விடுத்த டிகே சிவகுமார் இன்று சென்னை வந்துள்ளார். அவரிடம் அவ்விவகாரம் பற்றி முதல்வர் ஸ்டாலின் இன்று பேசுவாரா?

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது பற்றி ஸ்டாலின் தொடர்ந்து பொய் பேசி வருகிறார் முதல்வர். தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர். ஆனால் தமிழகத்தில் அதை நடத்த மத்திய அரசின் ஒப்புதல் தேவை என்று தொடர்ந்து பொய் பேசி வருகிறார் ஸ்டாலின். தெலங்கானா முதல்வர் இங்கு வந்துள்ளார். அவரது வழியில் ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்த உத்தரவிடுவாரா?

இப்படியாக தமிழகத்தின் உரிமைகளைப் பற்றி பேசாமல், தமிழக உரிமைகளைப் பறிக்கும் மாநிலங்களின் முதல்வர்களையே இங்கு வரவழைத்து தேவையற்ற ஒரு கூட்டத்தை ஸ்டாலின் நடத்துகிறார்.

அவர் பிரச்சினை இருப்பதாக கற்பனை செய்துகொண்டு நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என்று சொல்லி ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் நாடகம் நடத்துகிறார். நாடகத்தை நடத்துட்டும். பஜ்ஜி, பிஸ்கட் எல்லாம் சாப்பிடட்டும். கூடவே தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவது தொடர்பாக ஆலோசனையை மேற்கொள்ளட்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

x