சென்னை: எக்காரணம் கொண்டும் எங்கள் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம். நாங்கள் ஒற்றுமையாக நின்று எங்கள் மாநிலங்களின் தொகுதிகள் குறையாமல் பார்த்துக் கொள்வோம். அவர்கள் என்னை திஹார் சிறைக்கு அனுப்பினால் கூட நான் அஞ்சமாட்டேன் என்று கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை தொடர்பான ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ கூட்டம் இன்று சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் ஏற்கெனவே தமிழகம் வந்துவிட்டனர். இந்நிலையில் இன்று காலையில் கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் சென்னை வந்தார். அவரை தமிழக அமைச்சர் பொன்முடி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் வரவேற்றனர்.
விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த டி.கே.சிவகுமார், “நான் இங்கே தமிழக முதல்வர் ஸ்டாலினின் அழைப்பை ஏற்று வந்துள்ளேன். இந்தக் கூட்டத்தைக் கூட்டியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் கூட்டாட்சி அமைப்பையும், அரசமைப்பையும் பேணுவதை எண்ணிப் பெருமைப்படுகிறோம். இப்படி இங்கே ஒன்றுகூடுவது என்பது ஒரு தொடக்கம்.
இன்று இந்த விவகாரத்தில் அடுத்தது என்னவென்பது பற்றி ஆலோசிப்போம். நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். தெலங்கானா, பஞ்சாப், கேரளா முதல்வர்கள் ஏற்கனவே வந்துள்ளனர். எக்காரணம் கொண்டும் எங்கள் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம். நாங்கள் ஒற்றுமையாக நின்று எங்கள் மாநிலங்களின் தொகுதிகள் குறையாமல் பார்த்துக் கொள்வோம்.
நாங்கள் அனைவரும் நாட்டின் நலனுக்காக ஒன்றிணைகிறோம். எங்கள் சுயலாபத்துக்காக அல்ல. எங்கள் மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை செலுத்துகின்றன. அப்படியிருக்க மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து கல்வி வளர்ச்சி, மக்கள் தொகை கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி என பங்களிப்பு செய்யும் மாநிலங்களைப் பழிவாங்கும் நடவடிக்கையை மத்திய அரசு கட்டவிழ்க்க முயற்சிக்கிறது. நாங்கள் ஒருபோதும் மாநில உரிமைகளை விட்டுத்தர மாட்டோம். எங்கள் மாநிலங்களின் தொகுதிகளையும் விட்டுத்தர மாட்டோம். அண்ணாமலை எங்கள் மாநிலத்தில் அரசு அதிகாரியாக செயல்பட்டவர். இன்று அவர் வேறு ஒரு பாதையில் பணி செய்கிறார். அவர் பணியை அவர் செய்யட்டும். நாங்கள் எங்கள் வேலையைச் செய்கிறோம். பாஜகவின் கருப்புக் கொடிகளை நான் வரவேற்கிறேன். அவர்கள் என்னை திஹார் சிறைக்கு அனுப்பினால் கூட நான் அஞ்சமாட்டேன்” என்றார்.