சென்னை: என்றைக்கும் முஸ்லிம்களுக்கு துணையாக இருப்பேன் என்று அதிமுக சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி எழும்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று நோன்பை திறந்துவைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:நபிகள் நாயகத்தின் போற்று தலுக்குரிய வழிகாட்டுதலில் வாழ்பவர்களுக்கு இந்த ரமலான் மாதம் வசந்த காலம். உங்கள் நோன்பைப் போற்றுகிறோம். இம்மை வாழ்வில் நாம் ஒன்றுபட்டு, சகோதர பாசத்துடன் வாழ்ந்து, அன்பையும், சமாதானத்தையும் பெருக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல ஆண்டுகளாக, அதிமுக சார்பில் இஃப்தார் விழாவை நடத்தி வந்தார். தனது வாழ்வில் இளைமைக் காலம் முதல் நிறைவு நாள் வரை எம்ஜிஆர் இஸ்லாமிய நண்பர்கள் பலரைப் பெற்றிருந்தார்.
அந்த ஒப்பற்ற இருபெரும் தலைவர்களால் அரசியலில் உருவாக்கப்பட்டவன் நான். பதவிக்காவோ, புகழ்ச்சிக்காகவோ அரசியலுக்கு வந்தவனல்ல. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கையால் கவரப்பட்டு, மக்களுக்குத் தொண்டாற்ற அரசியலுக்கு வந்த தொண்டன் நான். எனக்கு எந்தவித தனிப்பட்ட கருத்தும், நிலைப்பாடும் கிடையாது. சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட தமிழனாக, இந்தியனாக எல்லோருக்கும் சமநீதியும், சமபாதுகாப்பும், சமஉரிமையும் கிடைக்க வேண்டும் என்று உளமார நினைப்பவன் நான்.
எண்ணிக்கையில் குறைவாக உள்ள சிறுபான்மையினரை பாதுகாத்து, அரவணைத்து, அன்பு செலுத்துவதை, என் தலையாய கடமையாகக் கொண்டு பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நான், என்றைக்கும் உங்களுக்கு துணையாக இருப்பேன். மக்களின் பன்முகத் தன்மையை ஏற்றுக்கொண்டு செயல்படும் இயக்கம் அதிமுக. அவரவருக்கு வழங்கப்பட்டிருக்கும் தனித் தன்மையைநாங்கள் மதிக்கிறோம், போற்று கிறோம், வணங்குகிறோம், பாதுகாக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக துணை தலைமை ஹாஜி முகம்மது அக்பர் அலி ஷா ஆமிரி, அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, கட்சியின் சிறுபான்மை யினர் நலப்பிரிவு செய லாளர் எஸ்.அப்துல் ரஹீம், ஆற்காடு இளவரசர் முகம்மது அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.