திராவிடத்துக்கு எதிராகத்தான் தமிழ் தேசியமே தோன்றியது: சீமான்


சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கடந்த ஆட்சியைவிட திமுக ஆட்சி மோசமாக உள்ளது. தொடர்ந்து கொலைகள் நடைபெற்று, பாதுகாப்பற்ற மாநிலமாக மாறியுள்ளது.

பிஹாரில்தான் சாதாரணமாக கொலைகள் நடந்துவந்தன. தற்போது தமிழகம் அதைவிட மோசமாகி விட்டது. போலீஸாருக்குக்கூட பாதுகாப்பு இல்லை. டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. டெல்லியில் ரூ.150 கோடி ஊழல் செய்ததற்கே அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்தனர். ஆனால், தமிழகத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று என்பதை ஏற்க முடியாது. திராவிடத்துக்கு எதிராகத்தான் தமிழ் தேசியமே தோன்றியது. நீட் தேர்வு, கச்சத்தீவு பிரச்சினைகளை விட்டுவிட்டு, நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேசிவருகின்றனர்.

திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் தமிழ் படிக்க வாய்ப்பில்லை. புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறிவிட்டு, அதில் உள்ள இல்லம் தேடிக் கல்வியை செயல்படுத்தினர். இண்டியா கூட்டணியினர் ஆளும் மற்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்போது, திமுக ஏன் தயக்கம் காட்டுகிறது? திமுக ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் சிறைக் கைதிகளை விடுவிப்பதாக கூறிவிட்டு, தற்போது ஆளுநர் மீது பழி போடுகின்றனர்.

தமிழகத்தில் உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில், கடன் மட்டும் ரூ.9.50 லட்சம் கோடியாக உள்ளது. கடனில்தான் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இவ்வாறு சீமான் கூறினார்

x