நீர்வளங்களை காப்பதில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலக தண்ணீர் தினம் இன்று (மார்ச் 22) கடைபிடிக்கப்படும் நிலையில், தமிழகத்தில் உள்ள நீர் ஆதாரங்களான சதுப்பு நிலங்களை அறிவிக்கை செய்து பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீர்வளங்களை காப்பதில் அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் உள்ள 34 ஆறுகளையும் மேம்படுத்த வேண்டும். சுமார் 41,000 ஏரிகளை மீட்டு, அவற்றின் முழு கொள்ளளவை உறுதிசெய்ய வேண்டும். தமிழகத்தின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் காப்பாற்ற போர்க்கால வேகத்தில் நீர்வள ஆதாரங்களை காப்பாற்றவும், மேம்படுத்தவும் வேண்டும்.
பெருவாரியான சதுப்பு நிலங்கள் பயனற்ற நிலங்களாக உருமாற்றம் செய்யப்பட்டுள்ளன. திடக்கழிவுகள், கழிவுநீர், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட கேடுகளால் நாசமாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சதுப்பு நிலங்கள் ஆணையம் கடந்த 2018 நவம்பர் 26-ம் தேதி உருவாக்கப்பட்டது. 6 ஆண்டுகள் கடந்தும், 2017 சதுப்பு நில விதிகளின்கீழ் ஒன்றுகூட சதுப்பு நிலமாக அறிவிக்கை செய்யப்படவில்லை. இந்த சூழலில், இன்று நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் ஊராட்சிகளின் நீர்நிலைகளை சதுப்பு நிலங்களாக அறிவிக்கை செய்ய கோரி, அனைத்து கிராமசபையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்