வடக்கே இருந்து வந்த அலெக்ஸாண்டர், ஓளரங்கசீப், சிவாஜி யாருக்கும் தமிழகம் தலைவணங்கியதில்லை: தங்கம் தென்னரசு பெருமிதம்


சென்னை: வடக்கே இருந்து வரக்கூடிய எந்தவொரு ஆதிக்கத்திற்கும் தமிழ்நாடு வரலாற்றில் எந்த காலக் கட்டத்திலும் தலை வணங்கியதில்லை. மகா அலெக்சாண்டர், சந்திரகுப்த மௌரியர், அசோக சக்கரவர்த்தி, ஓளரங்கசீப்,சத்ரபதி சிவாஜி என யாராலும் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய முடியவில்லை என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் நடைபெற்று வருகிறது. இன்றைய விவாதத்தின் போது பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 'மத்திய அரசில் நம்முடைய குழந்தைகளின் கல்விக்கான நிதியைத் தர மறுக்கிறார்கள். நீட்டிய இடத்திலே கையெழுத்தைப் போட்டுக்கொண்டு, நாங்கள் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு போ என்று சொல்லக்கூடிய அந்த வல்லாதிக்க மனோபாவம் அதன் காரணமாக தமிழ்நாடு இன்றைக்கு வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படி நீங்கள் கையெழுத்துப் போட்டுவிட்டுப் போனால்தான் நாங்கள் உரிய நிதியை விடுவிப்போம் என்று நீங்கள் சொன்னால், ‘எமை நத்துவாய் என எதிரிகள் கோடி இட்டு அழைத்தாலும் தொடேன்’ என்கின்ற அந்தத் தன்மான உணர்வோடு 2 ஆயிரம் கோடி அல்ல 10 ஆயிரம் கோடி ரூபாயை நாங்கள் இழந்தாலும் எங்கள் கொள்கையை நாங்கள் இழக்கமாட்டோம் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பிரகடனம் இன்றைக்கு செய்திருக்கிறார்.

வரலாற்றிலே இன்னுமொரு முக்கியமான செய்தியை நான் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கென்று சில தனித்துவமான குணங்கள் உள்ளதாக நான் சொன்னேன். உப்பு மீதான தீர்வை. இது ஆங்கிலேயருடைய ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டிலே நடந்த சம்பவம். உப்பு மீதான தீர்வையை ஒரு மணங்கிற்கு 8 அனாக்களாக உயர்த்துமாறு சென்னை மாநகர அரசுக்கு அன்றைய இந்திய அரசு உத்தரவிட்டது. இதை சென்னை மாகாண அரசு அன்றைக்கு எதிர்த்தது. உப்பு மீதான வரி என்பது மக்களுடைய ஆதரவை இழக்கக்கூடிய வரி. உப்பின்மீது ஏற்கெனவே நாம் விதித்துள்ள வரிச் சுமை அதிகமானது. உழைக்கும் மக்கள் தான் இந்த உப்பை அதிகம் வாங்கி சாப்பிடக் கூடியவர்கள். விலை அதிகரிப்பின் காரணமாக தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் தேவைப்படும் அளவிற்கு உப்பு வாங்க காசில்லாம ல் அவதிப்படுகிறார்கள் என்று சென்னை மாகாணத்தினுடைய அன்றைய Governor-ஆக இருந்த Trevelyan (Sir Charles Edward Trevelyan) இதைக் கடுமையாக எதிர்த்தார்.

Trevelyan அவர்களுடைய கருத்தை நிர்வாகக் குழுவிலிருந்த பிரதிநிதிகள் 2 பேர் அன்றைக்கு ஆதரித்தார்கள். வரியை உயர்த்துவதற்குப் பதிலாக வரியைக் குறைத்தால், உப்பு அதிகமாக வாங்கப்படும் என்றும் அதன் வாயிலாக வருவாய் உயரும் என்றும் அவர்கள் யோசனையினைத் தெரிவித்தார்கள். உப்பு விற்பனைக் கூடங்களைப் புதிதாகத் திறந்தும், வரி ஏய்ப்புக்கு இடமில்லாமல் உப்பு தயாரித்தல் மற்றும் விற்பனை ஆகியவற்றைக் கடுமையாகக் கண்காணித்தும் வரி வருவாயை நாம் அதிகப்படுத்திக்கொள்ளலாம் என்ற யோசனையையும் அன்றைக்குத் தெரிவித்தார்கள். இந்திய அரசுக்கே சென்னை மாநகரத்தினுடைய Governor அவர்கள் அன்றைக்கு அந்த ஆலோசனையை வழங்கினார்கள். ஒரு காலத்திலே சென்னையிலிருந்த Governor-கள் எல்லாம் டெல்லியிலே இருக்கக்கூடிய அரசாங்காத்திற்கு நல்ல ஆலோசனைகளை எல்லாம் அப்போது வழங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

தேயிலை சாகுபடி மீதான அந்த வரியையும் கைவிட வேண்டும் என்று அன்றைக்கு ஆலோசிக்கப்பட்டது. ஆனால், உப்பு மீதான உற்பத்தி வரி மாகாணத்திற்கு மாகாணம் வெவ்வேறு விகிதங்களில் 1869-களில் அதிகரிக்கப்பட்டது. சென்னை மாநகரத்தின் Governor-க்கு செவி சாய்க்காமல் அன்றைக்கு மத்தியிலிருந்த இந்திய அரசு உப்புக்கு வரி விதித்ததுதான் பிற்காலத்தில் மகாத்மா காந்தி உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு அவர் அதை முன்னெடுத்து, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே அன்றைக்கு நிலைகுலைய வைத்தது என்பதை நான் உங்களுக்கு இங்கே தெரிவிக்க விரும்புகின்றேன். நான் இதன் மூலமாக இந்த அவைக்கு தெரிவிப்பது என்னவென்றால், மக்கள் நலனுக்கு எதிராக தலைநகரிலிருந்து எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிரான குரல் கொடுப்பதற்கு சென்னை மாகாணம் வழி வழியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், மக்கள் பக்கத்தில்தான் என்றைக்கும் இருப்போம் என்பது இந்த மண்ணின் குணம் என்பதையும் நான் இங்கே தெரிவிக்க விரும்புகின்றேன்.

வடக்கே இருந்து வரக்கூடிய எந்தவொரு ஆதிக்கத்திற்கும் தமிழ்நாடு வரலாற்றில் எந்த காலக் கட்டத்திலும் தலை வணங்கியதில்லை என்பதை நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. மகா அலெக்சாண்டர் இந்தியாவிற்கு வந்தார். மகா அலெக்சாண்டருடைய வெற்றிப் பாதையில் தமிழ்நாடு ஒருபோதும் இருந்ததில்லை. மௌரியப் பேரரசர் சந்திரகுப்த மௌரியரால் தமிழ்நாட்டு எல்லையைத் தொட்டுக்கூடப் பார்க்க முடியவில்லை அசோக சக்கரவர்த்தியினுடைய ஆட்சிச் சக்கரம் தமிழ் நிலப்பரப்பில் சுழலவில்லை. குப்தர்களின் காலம் ‘பொற்காலம்’ என்று அழைக்கப்பட்டாலும் சமுத்திரகுப்தனுடைய காலடி இந்த தமிழ் மண்ணில் கடைசி வரை படியவில்லை.

கனிஷ்கருடைய ஆட்சி எல்லைகள் என்பது விந்தியத்திற்கு தெற்கே ஒருபோதும் தாண்டியதில்லை. அக்பர் பாதுஷாவின் ராஜ்ஜியம் தமிழ்நாட்டை எட்ட முடியவில்லை. இந்துஸ்தானின் பாதுஷா என்று மட்டுமில்லாமல் நான் இந்த உலகுக்கே நான் தான் ராஜா ‘Emperor of the Universe’ என்று தன்னை அழைத்துக்கொண்டாரே ஓளரங்கசீப், அந்த ஓளரங்க சீப்பினால் கூட தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை. அந்த ஓளரங்க சீப்பினாலேயே ‘மலை எலி’ என்று அழைக்கப்பட்டாரே மராட்டிய மண்ணின் சத்ரபதி சிவாஜி அவர்கள், அவரால்கூட தமிழ்நாட்டை ஆட்சி செய்ய முடியவில்லை. இந்த வரலாறு தமிழ் மண்ணிற்கு மட்டுமே உரித்தான வரலாறு என்பதை நான் இந்த அவைக்கு தெரிவித்துக்கொள்ள விரும்பு கிறேன்” என்று தங்கம் தென்னரசு கூறினார்.

x