தமிழ்நாட்டின் துயர்துடைக்க சிவபெருமானே காசு தந்தார்; ஆனால் மத்திய அரசு மறுக்கிறது - தங்கம் தென்னரசு ஆதங்கம்


சென்னை: தமிழ்நாட்டு மக்களுடைய கஷ்டத்திற்கு, துயர் துடைப்பதற்கு சிவபெருமானே வந்து காசு கொடுத்த நிலை அன்றைக்கு இருந்தது. ஆனால், தமிழ்நாட்டிற்கு காலணா காசு, தம்பிடி காசு நாங்கள் கொடுக்க மாட்டோம் என்று மத்திய அரசு இன்றைக்கு விடாப்பிடியாக இருக்கிறது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் நடைபெற்று வருகிறது. இன்றைய விவாதத்தின் போது பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 'தமிழ்நாட்டிற்கென சில தனித்துவமான கதைகளும், வரலாறுகளும் கால வெளியிலே நிரம்ப இருக்கிறது. அதில் ஒன்றை நான் இந்த அவைக்கு கவனப்படுத்த விரும்புகிறேன். திருவீழிமிழலை என்கிற ஒரு ஊர் தமிழ்நாட்டிலே திருவாரூர் மாவட்டத்திலே இருக்கிற ஒரு ஊர். அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திலும், இன்றைய திருவாரூர் மாவட்டத்திலும் இருக்கக்கூடிய ஊர். இசை வல்லுநர்களாலே இன்றைக்கும் மிகப்பெரிய அளவிலே புகழ் அடைந்திருக்கக்கூடிய அந்த ஊர் திருவீழிமிழலை. சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக வௌவால்நத்தி மண்டபம் என்றுகூட ஒரு மண்டபம் உண்டு. தமிழ்நாட்டிலே சிற்பக் கலையைக் கோயில்களிலே செய்யக்கூடியவர்கள் சில ஊர்களை விலக்கிவிட்டு அதற்கு புறனடை செய்வார்கள். அதிலே இருக்கக்கூடிய அந்த வௌவால்நத்தி மண்டபமும் அத்தகைய சிறப்பு வாய்ந்த ஊர் அந்த ஊர்.

அந்த ஊருக்கு மேலும் ஒரு சிறப்புண்டு. அந்த ஊருக்கு நான் தொடக்கத்திலே சொன்னதைப்போல 7 ஆம் நூற்றாண்டிலே திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் அந்த ஊருக்கு வந்து தங்கி இருந்தார்கள் என்பது வரலாறு. அப்படி அவர்கள் தங்கி இருக்கக்கூடிய காலக்கட்டத்தில் அந்தப் பகுதியிலே மிகப்பெரிய ஒரு பஞ்சம் ஏற்படுகிறது. நம்முடைய தமிழ்நாட்டில் பழைய பெரியவர்களை எல்லாம் நீங்கள் கேட்டுப் பார்த்தீர்களென் றால் தாது வருச பஞ்சம் என்று ஒரு பஞ்சத்தை பற்றி சொல்வார்கள். அந்தப் பஞ்சத்தில் பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியிலே இருக்கிறபோது தமிழ்நாட் டில் இருக்கக்கூடியவர்கள் கொத்துக்கொத்தாக மடிந்தார்கள் என்று சொல்வார்கள்.

அதேபோன்று ஒரு பெரிய பஞ்சம் அந்த காலத்திலேயே உருவாகி இருந்ததாகச் சொல்கிறார்கள். அப்படி மக்கள் பசியால், பட்டினியால் துடித்துக் கொண்டிருந்த அந்த காலக்கட்டத்தில் அங்கிருக்கக்கூடிய அந்த மக்களுடைய துயரினை அவர்கள் படக்கூடிய கஷ்டத்தைப் பார்த்து பொறுக்க முடியாமல் ஞானசம்பந்தர் அங்கே இருக்கக்கூடிய மிழலைநாதராக இருக்கக்கூடிய அந்த ஊர் இறைவனைப் பற்றி, பார்த்து ஒரு பாடல் பாடினார்.

‘வாசி தீரவே, காசு நல்குவீர்

வாசி தீரவே, காசு நல்குவீர்

மாசின் மிழலையீர், ஏச லில்லையே.’

என்று கேட்டார். நாட்டு மக்கள் கஷ்டப்படுகிறார்கள், மிழலையில் இருக்கக்கூடிய சிவபெருமானே எங்கள் மக்களுடைய கஷ்டங்களை போக்குவ தற்காக நீங்கள் காசு தந்து அருள வேண்டும் என்று மனமுருகி ஞானசம்பந்தர் பெருமான் அங்கே இருக்கக்கூடிய சிவபெருமானிடத்திலே கேட்ட தாகவும், உடனடியாக, அங்கே இருக்கக்கூடிய இறைவன் மக்களுடைய கஷ்டத்தைப் போக்க வேண்டும் என்பதற்காக ஞானசம்பந்தருக்கு அந்த இறைவனே நேரிலே வந்து பொற்காசுகளை வழங்கி அந்த பொற்காசுகளின் வாயிலாக அவர் அந்த நாட்டு மக்களுடைய கஷ்டங்களை, பசி, பட்டியினிலிருந்து போக்கினார் என்பது தமிழ்நாட்டிலே கர்ண பரம்பரையாக விளங்கப்படக்கூடிய ஒரு கதை.

அந்தக் கதையிலே சொல்லும் போது கூட ஞானசம்பந்தருடைய காலத்திற்கு பிற்காலத்தில் வந்த சுந்தரமூர்த்தி நாயனார்,

“மிழலை இருந்தும் நீர் தமிழோடு இசை கேட்கும்

இச்சையால் காசு நித்தம் நல்கினீர்”

என்று பாடினார். மக்கள் படும்பாட்டிற்காக நீவிர் காசு கொடுத்தாய் என்பதைத் தாண்டி ஞானசம்பந்தர் பாடும் தமிழ் பாட்டிற்காகவும் சேர்த்துத்தான் நீ காசு கொடுத்தாய் என்று கவிதை நயத்தோடு சுந்தரமூர்த்தி நாயனார், poetic expression என்று சொல்வார்களே அதேபோன்று அவர் சொன்னார்.

நீங்கள் சிவபெருமானை பற்றி சொல்கிறபோது எந்நாட்டவர்க்கும் இறைவன் என்று அழைத்தாலும், அவர் தென்னாட்டினுடைய சிவனே என்கிற காரணத்தால் தென்னாட்டு மக்கள், தமிழ்நாட்டு மக்கள் கஷ்டப்பட போகின்ற ஒரு காலக்கட்டத்தில் தான் இறைவனாக இருந்தாலும் ஓடி வந்து தமிழ்நாட்டு மக்களுடைய கஷ்டத்திற்கு, துயர் துடைப்பதற்கு கடவுள் வந்து காசு கொடுத்த நிலை அன்றைக்கு இருந்தது. ஆனால், இன்றைக்கு நிலை என்ன? தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி, பசி வந்தாலும் சரி, பட்டினி வந்தாலும் சரி அவர்களுக்கு என்ன பிரச்சினை வந்தாலும் சரி, கடவுளே வந்து காசு கொடுத்திருந்தாலும் தமிழ்நாட்டிற்கு காலணா காசு, தம்பிடி காசு நாங்கள் கொடுக்க மாட்டோம் என்று ஒன்றிய அரசு இன்றைக்கு விடாப்பிடியாக இருக்கிறது.

கடும் மழையிலும், வெயிலிலும் ஓடாய் உழைத்து இன்றைக்கு நம்முடைய தாய்மார்கள் உருகி இருக்கிறார்கள். 100 நாள் வேலையைப் பார்க்கிறார்கள். அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று தெரியும். அவர்களுக்குரிய நிதியைக் கொடுங்கள் என்று கேட்கிறோம். ‘காசு தீரவே காசு நல்குவீர்’ என்று கேட்டார், நிதி வந்தது. மத்தியிலே இருக்கக்கூடிய மத்திய அரசிடம் கேட்கிறோம். ஓயாது உழைத்திருக்கக் கூடிய இந்த உழைப்பிற்கு நீங்கள் காசு கொடுங்கள் என்று கேட்டால், உழைத்த உழைப்பிற்கு இன்று வரை ஊதியம் தராமல் மறுக்கிறார்கள்” என்று தங்கம் தென்னரசு கூறினார்.

x