புதுக்கோட்டையில் பிரமாண்டமான புதிய பேருந்து நிலையம்: கட்டுமானப் பணி விரைவில் தொடக்கம்


படம்: கே.சுரேஷ்

புதுகை: புதுக்கோட்டையில் 4 வரிசைகளில் 52 பேருந்துகள் உட்பட மொத்தம் 60 பேருந்துகளை ஒரே நேரத்தில் நிறுத்தும் வகையில், புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.

புதுக்கோட்டையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பேருந்து நிலையக் கட்டிம் சிதிலமடைந்து, பொதுமக்களுக்கு அபாயத்தை விளைவிக்கு ம் வகையில் இருந்தது. இதையடுத்து, அதே இடத்தில் புதிய பேருந்து நிலையம் கட்ட தமிழக அரசு ரூ.18.9 கோடி நிதி ஒதுக்கியது. இதைத் தொடர்ந் து, பேருந்து நிலைய பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக நகர்ப் பேருந்துகள் தவிர, ஏனைய பேருந்துகள் அனைத்தும் அருகில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை வளாகத் தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

புதுக்கோட்டை நகராட்சி அண்மையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வசதிகளுடன் புதிய பேருந்து நிலையத்தைக் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், புதிய பேருந்து நிலைய வளாகத்தில் ஏற்படுத்தப்படவுள்ள வசதிகள் குறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறியது: புதுக்கோட்டை யில் 20,077 சதுர மீட்டரில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் பழைய கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிந்ததும் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கும்.

புதிய கட்டிடத்தின் தரைதளம் 3,720 சதுர மீட்டரில் அமையவுள்ளது. இதில் 74 கடைகள், 4 வரிசைகளில் 52 பேருந்துகள் உட்பட மொத்தம் 60 பேருந்துகள் நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது. மேலும், 2 தங்கும் விடுதிகள், தலா 4 ஆண் மற்றும் பெண்களுக்கான கழிப்பறைகள், 2 தாய்மார்கள் பாலூட்டும் அறைகள், நேர கட்டுப்பாட்டாளர் அறை, காத்திருப்பு அறை, மின் கட்டுப்பாட்டு அறை, ஏடிஎம் மையம், முன்பதிவு மையம், நிர்வாக அலுவலகம், பொருட்கள் பாதுகாப்பு அறை, காவல் நிலையம் ஆகியவை கட்டப்பட உள்ளன.

இதேபோல, முதல் தளத்திலும் அறைகள் கட்டப்பட உள்ளன. மழை மற்றும் வெயில் காலங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய பேருந்து நிலையம் பல்வேறு வசதிகளுடன் கட்டப்படவுள்ளது என்றனர்.

x