நெல்லை: திருநெல்வேலி டவுனில் கொலை செய்யப்பட்ட முன்னாள் சப்- இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் குடும்பத்தினரை சந்தித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறையின் அலட்சியம் ஏற்புடையதல்ல. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்கப் படும் நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன. இந்த அலட்சியப் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கொலை பின்னணியில் தொடர்புடைய திமுக பிரமுகர்கள் உட்பட அதிகாரிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளையும் இந்த வழக்கில் எதிரிகளாக சேர்க்கப்பட வேண்டும். பாதிப்புக்கு உள்ளான குடும்பத்தினருக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். என்றார். மாவட்ட துணைத் தலைவர் சாகுல் அமீது, பொதுச் செயலர்கள் ஆரிப் பாஷா, அன்வர்ஷா, மாவட்ட செயலாளர் முஸ்தபா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.