‘ஆடு நனையுதேன்னு ஓநாய் அழவேண்டாம்’ - தங்கம் தென்னரசுவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!


சென்னை: அதிமுகவுக்கு கொள்கை என்பது வேறு; கூட்டணி என்பது வேறு. கூட்டணி தேர்தல் வரும் போது அமைக்கப்படும். வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக கூட்டணி அமைப்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

தமிழக பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் நடைபெற்று வருகிறது. இன்றைய விவாதத்தின் போது 'மாணவர்களுக்கு அரசு வழங்கும் லேப்டாப்புக்கு 10 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையில் லேப்டாப் வாங்க முடியுமா' என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பினார். இதேபோன்று வேறு சில நிதிக்கணக்கு விவகாரங்கள் பற்றியும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, 'நீங்கள் இங்கே கூட்டல் கழித்தல் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்களது கூட்டல் கழித்தல் கணக்குகளை வேறு எங்கோ இருக்கும் ஒருவர் போட்டுக் கொண்டிருக்கிறார். உங்கள் மடியில் இருக்கும் கனத்தை வேறு ஒருவர் எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறார். நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதிமுக தொண்டர்களின் எதிர்காலத்தை நீர்த்துப்போக கூடிய அளவில் சாணக்கிய தந்திரத்தோடு செயல்படுகிறார்கள்'' என்றார்.

இதைக்கேட்டதும் பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் சிரித்தார். இதை பார்த்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ''என் கருத்திற்கு வானதி சீனிவாசன் மிகுந்த மகிழ்ச்சியோடு சிரிக்கிறார். அப்படியானால் பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது,'' என்றார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, ''எங்களுக்கு என்று கொள்கை இருக்கிறது. எந்த கூட்டல் கழித்தல் கணக்கிற்கும் நாங்கள் ஏமாற மாட்டோம். கூட்டணி கணக்கிலும் ஏமாற மாட்டோம்'' என்றார்.தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “கூட்டல் கழித்தல் கணக்கில் ஏமாறாமல் இருந்தால் மகிழ்ச்சி தான்” என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “பட்ஜெட் மீதான அமைச்சர் தங்கம் தென்னரசின் பதிலுரையில் வார்த்தை ஜாலங்கள் மட்டுமே இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின் 4 ஆண்டுகளில் ரூ.4.5 லட்சம் கோடி கடன் பெற்றதாக தெரிகிறது. அதனை மறைத்து சதவிகித அடிப்படையில் நிதியமைச்சர் பதில் அளித்து கொண்டிருக்கிறார். 73 ஆண்டு கால ஆட்சியில் தமிழக அரசின் கடன் ரூ.5.18 லட்சம் கோடி. ஆனால் திமுக கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.4.5 லட்சம் கோடி வாங்கி இருக்கிறது.

அதேபோல் தமிழக அரசின் கடன் தொடர்பாக எந்த வெள்ளை அறிக்கையும் வெளியிடப்படவில்லை. கடன் வாங்கியது மட்டுமே திமுக அரசின் சாதனை. புள்ளி விவரங்களை சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அதேபோல் பட்ஜெட் கணக்கை நிதியமைச்சர் பார்த்து கொண்டால் போதும். எங்களின் கணக்கை நாங்கள் பார்த்து கொள்கிறோம். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதைதான். அதிமுகவுக்கு கொள்கை என்பது வேறு; கூட்டணி என்பது வேறு. கூட்டணி தேர்தல் வரும் போது அமைக்கப்படும். வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக கூட்டணி அமைப்போம். எங்களுடன் கூட்டணி வைத்தவர்கள் திமுகவுடனும், திமுகவுடன் இருப்பவர்கள் எங்களுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் நிலைமை. அதிமுக ஒருபோதும் தன்மானத்தை இழக்காது” என்று தெரிவித்தார்.

x