புதுவையில் புதிதாக 305 ஆஷா பணியாளர்கள் நியமனம் - ஊதியம் உயர்த்த பரிசீலனை: முதல்வர் அறிவிப்பு


புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத்துறையில் புதிதாக 305 ஆஷா பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இந்நிலையில், ஊதியத்தை உயர்த்த பரிசீலிக்கிறோம் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

புதுவை சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு: செந்தில்குமார் (திமுக): பாகூர், கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர், அரசு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதை அரசு அறியுமா? இதை நிரப்ப அரசு முன்வருமா?

முதல்வர் ரங்கசாமி: தற்போது காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. 226 செவிலியர் பணியிடங்களை நிரப்ப உள்ளோம். டாக்டர்கள், மருந்தாளுநர் பணிகளும் நிரப்பப்படும். 305 ஆஷா பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவர்கள் அனைத்து தொகுதிக்கும் பணியாற்ற களத்துக்கு வருவார்கள்.

இதையடுத்து ஆஷா பணியாளற்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தர அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் கோரினர். இறுதியில் முதல்வர் ரங்கசாமி, "எம்எல்ஏக்கள் அக்கறையோடு பேசுகிறீர்கள், அரசுக்கும் அக்கறை உள்ளது. ஆஷா பணியாளர்களுக்கு மத்திய அரசு ரூ.3 ஆயிரம்தான் வழங்குகிறது. மாநில அரசு நிதியில் கூடுதலாக ரூ.7 ஆயிரம் வழங்கி ரூ.10 ஆயிரம் சம்பளம் தருகிறோம். அவர்களுக்கு ஊக்கத்தொகையும் கிடைக்கிறது. சம்பளம் உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்வோம். " என்றார்.

x