புதுச்சேரி: விபத்தில் தலை, முதுகுத் தண்டில் காயமடைந்து சிகிச்சை பெற ரூ.3 லட்சம் நிதி தரப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுவை சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ''விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சை பெற மத்திய அரசு ஒரு திட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.1.5 லட்சம் நிதியும், ஒரு வாரம் சிகிச்சையும் அளிக்கப்படும். மருத்துவமனையில் உள்நோயாளிகளாக கட்டணம் இல்லாமல் சிகிச்சை பெறளலாம். இத்திட்டத்தை புதுச்சேரியில் வியாழக்கிழமை தொடங்கியுள்ளோம்.
அதேநேரத்தில் விபத்தில் தலை, தண்டுவடத்தில் காயமடைந்தவர்களுக்கு கூடுதலாக செலவு செய்யவேண்டிவரும். சிகிச்சைக்கு வெளியூர் சென்றால் அப்போது இந்த நிதி போதாது, கூடுதலாக செலவாகும். எனவே மத்திய அரசு திட்டத்தோடு, புதுவை அரசின் மாநில நிதி ரூ.1.50 லட்சம் இணைத்து ரூ.3 லட்சம் வழங்கப்படும். விபத்தில் பாதிக்கப்படும் அனைவருக்கும் பாகுபாடின்றி இந்த நிதி வழங்கப்படும்'' என்று தெரிவித்தார்.