திருப்பூர் மாநகரில் வரி செலுத்தாத 568 குடிநீர் இணைப்பு துண்டிப்பு: அதிரடி நடவடிக்கை


திருப்பூர்: திருப்பூர் மாநகரில் வரி செலுத்தாத 568 குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாநகராட்சி ஆணையர் எஸ்.ராமமூர்த்தி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சி 4 மண்டலங்களிலும் சொத்து வரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடைக் கட்டணம், திடக் கழிவு மேலாண்மைக் கட்டணம், குத்தகை இனங்கள் ஆகியவற்றுக்கான வரி மற்றும் கட்டண நிலுவை செலுத்த அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை வரி வசூல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

மாநகராட்சி மைய அலுவலகம், 4 மண்டல அலுவலகங்கள், செட்டிப்பாளையம், தொட்டிப்பாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை, குமரன் வணிக வளாகம், முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், பாண்டியன் நகர் ஆகிய கணினி வரி வசூல் மையங்களில் பணமாகவோ அல்லது ஆணையர், திருப்பூர் மாநகராட்சி என்ற பெயரில் காசோலையாகவோ வரியினங்களை பொதுமக்கள் செலுத்தலாம்.

https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், ஜிபே, போன்பே, பே டிஎம் போன்ற செயலிகள் மூலமாகவும் வரி செலுத்த வசதி செய்யப் பட்டுள்ளது. மாநகராட்சியில் 2024-25 இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரி ரூ.167 கோடியே 33 லட்சம் ஆகும். இதுவரை ரூ.118 கோடியே 15 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் நிலுவை வைத்துள்ள கட்டிடங்களின் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. 1-வது மண்டலத்தில் 151, இரண்டாம் மண்டலத்தில் 93, மூன்றாம் மண்டலத்தில் 172, நான்காம் மண்டலத்தில் 152 என மொத்தம் 568 இணைப்புகள் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளன. வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள கட்டிடங்களின் மீது குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு, ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கையை தவிர்க்க நிலுவை வரியினங்களை உடனடியாக செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

x