கோவை: மகளின் திருமணம் தாமதத்தால் அரசு பள்ளி ஆசிரியை பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை அருகேயுள்ள அரிசி பாளையத்தைச் சேர்ந்தவர் பத்மா(53). இவரது கணவர் சுந்தர்ராஜன் உயிரிழந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பத்மா, வழுக்குப் பாறையில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில், ஆங்கிலப் பிரிவு ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர், நேற்று முன்தினம் நாச்சிபாளையம் - வழுக்குப்பாறை வழித்தடத்தில் உள்ள, தனியாருக்கு சொந்தமான தோட்டம் அருகே பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். மதுக்கரை போலீஸார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கடந்த 18ம் தேதி வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற பத்மா மாலையில் வீடு திரும்பவில்லை. பத்மாவின் மகனான கல்லூரி மாணவர் லட்சுமி நாராயணன், தாயுடன் பணியாற்றும் சக ஆசிரியைக்கு போன் செய்து விசாரித்த போது, அவர் அன்று பள்ளிக்கு வரவில்லை எனத் தெரிந்தது. அதிர்ச்சியடைந்த அவர், மதுக்கரை போலீஸில் புகார் அளித்தார். அவரை தேடி வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஆசிரியை பத்மா, வீட்டிலிருந்து புறப்படும்போது, செல்போன், வழக்கமாக அணியும் நகைகள் ஆகியவற்றை கழற்றி வைத்து விட்டுச் சென்றுள்ளார்.
சடலம் மீட்கப்பட்ட பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று முதலில் தனது வாகனத்துக்கு பெட்ரோல் போட்டுள்ளார். தொடர்ந்து மற்றொரு வாகனம் வீட்டில் உள்ளது, அதற்கு பெட்ரோல் தேவைப்படுகிறது எனக்கூறி கேனில் பெட்ரோல் வாங்கியுள்ளார். இக்காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. மகளுக்கு திருமணம் தாமதமாகி வந்தது, மகனின் எதிர்காலம் குறித்த கவலை, எதிர்பாராதவிதமாக குடும்பத்தில் ஏற்பட்ட பணச் செலவுகள் போன்ற வற்றால் மன அழுத்தத்தில் இருந்த பத்மா, மேற்கண்ட விபரீத முடிவை எடுத்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.