சென்னை: தெலங்கானா மாநிலம் சாரலப்பள்ளியில் இருந்து திருவண்ணாமலை வழியாக கன்னியாகுமரிக்கு மூன்று மாதங்களுக்கு ‘கோடைகால சிறப்பு ரயில்’ இயக்கப்பட உள்ளதாக திருச்சி ரயில்வே கோட்ட செய்தி தொடர்பு அலுவலர் ஆர்.வினோத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தெலங்கானா மாநிலம் சாரலப்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து புதன்கிழமை இரவு 9.50 மணிக்கு கோடை கால சிறப்பு ரயில் (எண் - 07230) புறப்படும். குண்டூர், ஓங்கோல், நெல்லூர், ரேணிகுண்டா, திருத்தணி மற்றும் காட்பாடி வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தை மறுநாள் (வியாழக்கிழமை) நண்பகல் 12.40 மணிக்கு வந்தடைகிறது.
பின்னர், இங்கிருந்து நண்பகல் 12.42 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோயில் வழியாக வெள்ளிக் கிழமை அதிகாலை 2.30 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.
இதேபோல், கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.15 மணிக்கு கோடை கால சிறப்பு ரயில் (எண் - 07229) புறப்படும். சென்றடைந்த வழித்தடம் வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தை அன்றைய தினம் மாலை 6 மணிக்கு வந்தடையும். பின்னர், இங்கிருந்து 6.02 மணிக்கு புறப்பட்டு சாரலப்பள்ளி ரயில் நிலையத்தை சனிக்கிழமை காலை 11.40 மணிக்கு சென்றடையும்.
சாரலப்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஏப்ரல் மாதம் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளிலும், மே மாதம் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளிலும், ஜுன் மாதம் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படவுள்ளன.
கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து சாரலப்பள்ளி ரயில் நிலையத்துக்கு ஏப்ரல் மாதம் 4, 11, 18, 25, மே மாதம் 9, 16, 23, 30, ஜுன் மாதம் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படவுள்ளன” என தெரிவித்துள்ளார்.