உஷார் மக்களே... செயற்கை நிறமூட்டப்பட்ட 8 டன் தர்பூசணி பறிமுதல்; கிருஷ்ணகிரி அதிர்ச்சி!


கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டையில் செயற்கை நிறமூட்டப்பட்ட 8 டன் தர்பூசணியை பறிமுதல் செய்து, 3 வியாபாரிகளுக்கு அபராதம் விதித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

தேன்கனிக்கோட்டை பகுதியில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனங்கள் மூலம் வட்டார உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர்கள் முத்து மாரியப்பன் (ஓசூர்), பிரகாஷ் (கெலமங்கலம்), சந்தோஷ் குமார் (தளி) ஆகியோர் அடங்கிய குழுவினர் கடைகளில் குளிர் பானங்கள், தண்ணீர் கேன்கள் மற்றும் தர்பூசணி பழங்களை பகுப்பாய்வு செய்தனர். இதில், 7 தர்பூசணி விற்பனை கடைகளில் நடந்த ஆய்வில், 3 கடைகளில் விற்பனை க்கு வைக்கப்பட்டிருந்த தர்பூசணி பழங்களில் ஊசி மூலம் பழங்களில் ரசாயன செயற்கை நிறமூட்டிகளைச் செலுத்தி விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, 8 டன் தர்பூசணி பழங்களைப் பறிமுதல் செய்து, அப்பகுதியில் குழி தோண்டி புதைத்து அழித்தனர். இதுதொடர்பாக 2 வியாபாரிகளுக்குத் தலா ரூ.5 ஆயிரமும், ஒருவருக்கு ரூ.2 ஆயிரமும் அபராதம் விதித்தனர். மேலும், அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கூறியதாவது: தர்பூசணி பழங்களை நிறத்தை பார்த்துதான் மக்கள் வாங்க ஆர்வம் காட்டு கின்றனர். இதனால், வியாபாரிகள் எரித்ரோசின் என்ற ரசாயன செயற்கை நிறமூட்டியை ஊசி மூலம் பழத்தில் செலுத்தி விற்பனை செய்து வருகின்றனர். இதைச் சாப்பிடுவோருக்கு தலைவலி, காய்ச்சல், புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாகக் குழந்தைகளை அதிகம் பாதிக்கும்.

எனவே, பொதுமக்கள் தர்பூசணி பழங்களை வாங்கும்போது, பழத்தில் சிறு துண்டை வெட்டி நீரில் போட்டால் செயற்கை நிறம் தண்ணீரில் பிரிந்து செல்லும், அதேபோல, பஞ்சு, டிஸ்பூ பேப்பர் மூலம் பழத்தைத் துடைத்துப் பார்த்தால் செயற்கை நிறம் பேப்பரில் ஒட்டிக்கொள்ளும். இதுபோல செயற்கை நிறமூட்டிகளை ஊசி மூலம் செலுத்தி தர்பூசணி பழங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

x