தொடக்கக் கல்வி அலுவலக முஸ்லிம் பணியாளர்கள் ஒரு மணி நேரம் முன்கூட்டியே செல்ல அனுமதி: நோன்பு தொடங்கி 18 நாட்களுக்கு பின் உத்தரவு


திருச்சி: தொடக்கக் கல்வித் துறை அலுவலகங்களில், ரம்ஜான் நோன்பு இருக்கும் முஸ்லிம் பணியாளர்கள் ஒரு மணி நேரம் முன்னதாக வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நோன்பு தொடங்கி 18 நாட்களுக்குப் பிறகு பிறப்பிக்கப் பட்டுள்ள இந்த உத்தரவு பணியாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக தொடக்கக் கல்வித்துறை இணை இயக்குநர் (நிர்வாகம்) சார்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்க ளுக்கு, நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தொடக்கக் கல்வி அலுவலகம் மற்றும் இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலகம் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ரம்ஜான் நோன்பு இருக்கும் பணியாளர்கள் மார்ச் 2ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை மதிய உணவு இடைவேளைக்குப் பதிலாக ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்திலிருந்து செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து தொடக்க கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் கூறும்போது, ‘‘ரம்ஜான் நோன்பு மார்ச் 2-ம் தேதி முதல் கடை பிடிக்கப்பட்டு வரும் நிலையில், இவ்வளவு நாட்கள் கழித்து, மிகவும் தாமதமாக எதற்காக இந்த உத்தரவை பிறப்பித்தார்கள் எனத் தெரியவில்லை. அதுவும் மார்ச் 31-ம் தேதி ரம்ஜான் விடுமுறையாக இருந்தும், அந்தத் தேதியும் சேர்த்துக் குறிப்பிட்டுள்ளனர்’’ என்றனர்.

தமிழ்நாடு கல்வித் துறை தட்டச்சர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கடந்த மார்ச் 14-ம் தேதி அனுப்பிய வேண்டுகோள் கடிதத்தை தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியிட்டதாக இணை இயக்குநர் ஆணைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x