தஞ்சை பெருமாள் கோயில் அறங்காவலர் இஸ்லாமியரா? - ஹெச்.ராஜா குற்றச்சாட்டு; தமிழக அரசு பதில்!


சென்னை: தஞ்சை பெருமாள் கோயிலில் இஸ்லாமியரை அறங்காவலராக நியமித்துள்ளார்கள் என்ற பாஜக தலைவர் ஹெச்.ராஜாவின் குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘பெருமாள் கோவில் அறங்காவலராக இஸ்லாமியரை நியமித்த இந்து சமய அறநிலையத்துறை. இதுபோல் மசூதி பொறுப்புகளில் ஒரு இந்துவை தமிழக அரசு நியமிக்குமா?. இது திட்டமிட்டு இந்து கோவில்களை அழிக்கும் முயற்சி..!!

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா நெடுந்தெரு கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ராஜகோபால பெருமாள் கோவிலின் அறங்காவலராக நர்கீஸ் கான் என்கிற இஸ்லாமியரை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நியமித்திருக்கிறார்கள்.

அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் கடவுளாக ஏற்றுக் கொள்ளாத இஸ்லாமியர் எப்படி இந்து கோவில்களை பராமரிப்பார். அவர் எப்படி கோவில்களில் வழிபாடு நடத்துவார். இந்து சமய அறநிலையத்துறையில் வேற்று மதத்தவர்கள் இருக்கக் கூடாது என HRCE சட்டம் இருக்கும்பொழுது அதை மீறி சட்டத்திற்கு விரோதமாக ஒரு இஸ்லாமியரை எப்படி நியமிக்க முடியும்..?

இஸ்லாமிய அறங்காவலருக்கு இந்துக்களின் ஆகம விதிகள் எப்படி தெரியும்..? இதுபோல் மசூதி பொறுப்புகளில் ஒரு இந்துவை தமிழக அரசு நியமிக்குமா?

இது திட்டமிட்டு இந்து கோவில்களை அழிக்கும் முயற்சியாகவே நாங்கள் பார்க்கிறோம். எனவே உடனடியாக இஸ்லாமிய அறங்காவலரை நீக்கிவிட்டு, இஸ்லாமியரை அறங்காவலராக நியமித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவில் மீது பற்றுள்ள இந்து அறங்காவலரை நியமிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’ எனத் தெரிவித்தது பெரும் பரபரப்பை உருவாக்கியது.

இதற்கு விளக்கமளித்து தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம், ‘ தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா ரெகுநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ராஜகோபால பெருமாள் திருக்கோயிலின் அறங்காவலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நர்கீஸ் கான் இஸ்லாமியர் அல்ல. அவரின் தந்தை பெயர் தங்கராஜ். மிக சிக்கலான நிலையில் பிரசவம் பார்த்த மருத்துவர் நர்க்கீஸ்கானின் பெயரை அவருக்கு வைத்துள்ளார்கள் என கோயில் செயல் அலுவலர் விளக்கமளித்துள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x