பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு ரம்ஜான் போனஸ்: ஈரோடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு


ஈரோடு: பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு ரம்ஜான் போனஸ் வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

பீடி சுற்றும் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் என்பதால், அவர்களுக்கு ரம்ஜான் பண்டிகைக்கு முன்பாக போனஸ் வழங்கப் படுவது வழக்கமாகும். இந்த ஆண்டு வரும் 31ம் தேதி ரம்ஜான் பண்டிகை வரும் நிலையில், கொங்கு மண்டல ஐக்கிய பீடித் தொழிலாளர் சங்கம் (ஏஐடியுசி) மற்றும் பீடி தொழிற்சாலை நிர்வாகம் இடையே ரம்ஜான் போனஸ் தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, 2024 - 25ம் ஆண்டுக்கு, பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு, அவர்கள் சுற்றிய 1,000 பீடிகளுக்கு ரூ.34- வீதம் கணக்கிட்டு வழங்கப்படும். இந்த போனஸ் தொகை ரம்ஜான் பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக வழங்கப்படும். இது கடந்த ஆண்டைவிட 1,000 பீடிகளுக்கு ரூ.2 கூடுதலாகும்.

மேலும், அனைத்து தொழிலாளர்களுக்கும் தினசரி குறைந்தபட்சம் 1,000 பீடிகள் சுற்றுவதற்கு தேவையான அளவுக்கு இலை, தூள் வழங்க வேண்டும் என்றும், அனைத்து தொழிலாளர்களையும் இ.பி.எப் மற்றும் இஎஸ்ஐ திட்டத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்றும், சட்டப்படி கிராஜுவிட்டி வழங்க வேண்டும், தொழிலாளர் நலத்துறை சுற்றறிக்கையின் படி அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்றும் ஏஐடியுசி சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கைகள் நிர்வாகத் தரப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பேச்சு வார்த்தையில், ஈரோடு விபிஆர் காலேஜ் பீடி கம்பெனி சார்பில் உரிமையாளர்கள் விபிஆர் தங்கமணி, ஆர். அனந்த ராம கிருஷ்ணன், ஏ.சிவ ராம் கிருஷ்ணன் ஆகியோரும், கொங்கு மண்டல ஐக்கிய பீடித்தொழிலாளர் சங்கத்தின் (ஏஐடியுசி) சார்பில் சங்கப் பொதுச் செயலாளர் எஸ்.சின்ன சாமி, சங்க துணைத் தலைவர்கள் கே.எம்.யூசுப் (கொக்கராயன்பேட்டை) ஏ.ஜிலானி (அந்தியூர்), எஸ்.மெகரூன் (கவுந்தப்பாடி) உள்பட பல்வேறு கிளை சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

x