திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமேசான், ஃபிளிப்கார்ட் கிடங்குகளில் பிஐஎஸ் சட்டம் 2016 மீறப்படுவதாக இந்திய தர நிர்ணய அமைவனத்துக்கு (பிஐஎஸ்) சமீபத்தில் புகார் வந்தது. அதன் அடிப்படையில், இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலக அதிகாரிகள் இரு குழுக்களாக நேற்று முன் தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமேசான் செல்லர் சர்வீஸ் மற்றும் ஃபிளிப்கார்ட் கிடங்குகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
பொன்னேரி அருகே துரை நல்லூர் கிராமத்தில் உள்ள அமேசான் செல்லர் சர்வீஸ் கிடங்கில் பிஐஎஸ் சென்னை கிளை இணை இயக்குநர்கள் கவுத்தம் பி.ஜே, தினேஷ் ராஜகோபாலன் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், அங்கு தரச் சான்றளிக்கப்படாத, பல தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை மீறிய காப்பிடப்பட்ட குடுவைகள் மற்றும் உணவு கொள்கலன்கள், உலோக குடிநீர் பாட்டில்கள், சீலிங் ஃபேன்கள், பொம்மைகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பிஐஎஸ் தர முத்திரை இல்லாத, ரூ.36 லட்சம் மதிப்புள்ள, காப்பிடப்பட்ட குடுவைகள் உள்ளிட்ட 3,376 பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
செங்குன்றம் அருகே கொடுவள்ளியில் உள்ள ஃபிளிப்கார்ட் கிடங்கில் பிஐஎஸ் இயக்குநர் ஜித் மோகன் மற்றும் ஜீவானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அங்கு, 286 குழந்தைகளுக்கான டயப்பர் பாக்கெட்டுகள், 26 எஃகு வாட்டர் பாட்டில்கள், 10 காப்பிடப்பட்ட ஸ்டீல் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் பிஐஎஸ் தரநிலை முத்திரை (ஐஎஸ்ஐ) இல்லாமல் இருந்தன. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.