சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் மத்திய அரசின் பதிலால் திமுகவின் முகமூடி கிழிந்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு. அதனடிப்படையில் தான் பிஹார், தெலங்கானா, கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை மறுக்கும் தமிழக அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி வருகிறது.
தமிழக அரசு எந்த அடிப்படையில் இப்படி ஒரு நிலைப்பாட்டு வந்தது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டம் மத்திய அரசால் இயற்றப்பட்ட சட்டமாகும். அந்த சட்டத்தின்படி எந்த வகையான புள்ளி விவரங்களையும் சேகரிக்க முடியும். அதையும் தாண்டி தமிழக அரசுக்கு ஐயங்கள் இருந்தால் மத்திய அரசிடம் விளக்கம் கேட்கலாம். இந்நிலையில் மக்களவையில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய அரசுக்கு ஏதேனும் ஆட்சேபனை உள்ளதா? என கேள்வி எழுப்பினேன்.
அதற்கு பதிலளித்த மத்திய சமூகநீதித்துறை இணையமைச்சர் பி.எல்.வர்மா, தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்து மாநில அரசிடமிருந்து மத்திய அரசுக்கு எந்த தகவலும் வரவில்லை என தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் திமுக அரசுக்கு சமூகநீதியில் எந்த அக்கறையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மத்திய அரசின் பதிலால் தற்போது திமுக அரசின் சமூகநீதி முகமூடி கிழிந்து விட்டது. இனியும் தமிழக மக்களை ஏமாற்றாமல் உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.