திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாமல் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வரி பாக்கி வைத்துள்ளன. இந்த பணத்தை வசூலிக்க முடியாமல் மாநகராட்சி அலுவலர்கள் திணறி வருகின்றனர்.
நிதியாண்டின் இறுதியை எட்டியுள்ள நிலையில், திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் வரி வசூலை தீவிரப்படுத்தியுள்ளது. வரி செலுத்தாதவர் களின் வீடுகளில் குடிநீர் இணைப்பை துண்டித்தல், கடைகளுக்கு சீல் வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கை களில் அலுவலர்கள் ஈடுபட்டனர். இதனால் வரி வசூல் வேகமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் அரசியல் அழுத்தம் காரணமாக வரிவசூல் நடவடிக்கையை மாநகராட்சி அலுவலர்கள் கை விட்டனர். இதன் காரணமாக வரி வசூலில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய, மாநில அரசுகளின் அலுவலகங்களில் வரி பாக்கியை வசூலிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரூ.46 லட்சம் வரி பாக்கி வைத்துள்ளது. இதை செலுத்த வலியுறுத்தி மாநகராட்சி அலுவலர்கள் தொடர்ந்து முயற்சித்தும் அதற்கான பலன் இல்லாத நிலையே தொடர்கிறது. விரைவில் செலுத்திவிடுகிறோம் என்ற பதில் மட்டுமே சொல்கின்றனர். ஆனால், பணத்தை செலுத்தாமல் தாமதப்படுத்தி வருகின்றனர். அதேபோல், நகரில் மைய பகுதியில் உள்ள மாநில அரசின் திண்டுக்கல் மாவட்ட மகளிர் திட்ட வணிக வளாகம் ரூ.6 லட்சம் வரி பாக்கி வைத்துள்ளது.
இந்த நிதியாண்டு முடிவடைய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மத்திய, மாநில அரசு அலுவலக கட்டிடங்களுக்கான சொத்து வரி நிலுவைத் தொகை கிடைத்தால் மட்டுமே வரிவசூல் இலக்கை எட்ட முடியும். திண்டுக்கல் மாநகராட்சிக்கு நிர்ணயிக்கப்பட்ட வரிவசூலை எட்ட இன்னும் ரூ.1.34 கோடி வசூலிக்க வேண்டும். மாநகராட்சிக்கு வரி நிலுவைத் தொகையை செலுத்த மத்திய, மாநில அரசுத் துறைகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்தினர் எதிர்பார்க்கின்றனர்.