சென்னை: கடவுள் இல்லை என்று சொல்வது மட்டும் தான் பகுத்தறிவா ? இயற்கை வளங்களைச் சூறையாடக் கூடாது என்று சொல்வது பகுத்தறிவு இல்லையா ?. திராவிடம் என்ற பெயரில் சர்வாதிகாரம் நடப்பதாக இயக்குநர் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் கோபி நயினார் பேசுகையில், "அறிவியல் என்பது என்ன? கடவுள் இல்லை என்று சொல்வது மட்டும்தான் அறிவியலா? மண்ணை அள்ளக்கூடாது என்று சொல்வது அறிவியல் இல்லையா? கடவுள் இல்லை என்று சொல்வது மட்டும்தான் பகுத்தறிவா? இயற்கை வளங்களைச் சூறையாடக்கூடாது என்று சொல்வது பகுத்தறிவு இல்லையா ?
நீ ஒரு பகுத்தறிவாளனென்றால், இயற்கை வளங்களை சூறையாடுவதற்கு எதிராகப் பேசுகிற என் போன்றவர்களை, 'உன்னைப் போன்றவர்கள்தான் அரசுக்குத் தேவை' எனக் கூறி, அரவணைத்துக் கொள்ள வேண்டுமா ? வழக்குப் போட்டு அச்சுறுத்த வேண்டுமா ?. அப்படியானால் நீ சர்வாதிகாரி யாக இருக்கிறாய். திராவிடம் என்ற பெயரில் சர்வாதிகாரியாக இருக்கிறாய். அவர் சனாதானம் என்ற பெயரில் சர்வாதிகாரியாக இருக்கிறான். எதன் பெயரில் இருந்தாலும் சர்வாதிகாரம், சர்வாதிகாரம் தான்.
சனாதனத்தின் சர்வாதிகாரத்தை விட, திராடவிடத்தின் சர்வாதிகாரம் மிக கொடூரமாக இருக்கும். ஏனென்றால் என் எதிரி சண்டையிடும் போது, என்னையும் அவன் கொல்வான், அவனையும் நான் கொல்வேன். அதற்கான வாய்ப்பு எனக்கு இருக்கிறது. ஆனால் என் தோழன் என்னிடம் சண்டையிடும் போது அவனை எதிர்த்து தாக்குவதற்கு வாய்ப்பு கிடையாது. ஒரு நல்ல பெரியாரிஸ்ட் எப்படி இருக்க வேண்டும் என்பதை முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று இயக்குநர் கோபி நயினார் பேசியுள்ளார்.