புதுச்சேரி: ரொட்டி பால் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ரூ.18 ஆயிரம் ஊதியத்துக்கான ஆணையை முதல்வர் ரங்கசாமி இன்று வழங்கினார்.
புதுச்சேரி அரசு, பள்ளிக்கல்வித் துறையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ரொட்டிப் பால் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்தை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில் ரொட்டிப் பால் ஊழியர்கள் 917 நபர்களுக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலையில் ஊதிய உயர்வுக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி ரொட்டி பால் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ரூ.18 ஆயிரத்துக்காண ஆணையை ஊழியர்களுக்கு வழங்கினார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் எம்எல்ஏக்கள், துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ரொட்டி பால் ஊழியர்கள் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் நன்றி தெரிவித்தனர். பின்னர் சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்த அமைச்சர் நமச்சிவாயத்துக்கு பூ தூவி தங்களது மகிழ்வை வெளிப்படுத்தினர். இதற்கிடையே அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு, அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகின்றது. காலம் காலமாக நிறைவேற்றப்படாமல் இருந்த நிறைய கோரிக்கைகளுக்கு தீர்வுகண்டு இந்த அரசு நிறைவேற்றி கொடுத்துக்கொண்டிருக்கிறது.
அதனடிப்படையில் கல்வித்துறையில் பணியாற்றிய ரொட்டி பால், டிரைசைக்கிள் ஆபரேட்டர்ஸ் ஊழியர்கள், மதிய உணவு கொடுப்பவர் என 917 பேர் நீண்டகாலமாக ஊதிய உயர்வு வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்தனர். 23 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஆரம்ப கட்டத்தில் ரூ.4 ஆயிரம் ஊதியம் வாங்கினர். பிறகு அது ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. சென்ற ஆண்டு முதல் அது ரூ.10 ஆயிரமாக முதல்வரால் உயர்த்தி அறிவிக்கப்பட்டு, கடந்த சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கும், ரொட்டி பால் ஊழியர்களுக்கும் ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதற்கான அரசாணையானது கல்வித்துறை சார்பில் முதல்வரால் அந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். நீண்ட ஆண்டு கோரிக்கை அவர்களுக்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேலும் காவல்துறை, கல்வித்துறை, மின்துறை, நிர்வாக சீர்த்திருத்த துறை உள்ளிட்ட துறைகளில் பதவி உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புவது போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துக்கொண்டிருக்கிறது. இன்னும் ஒருவார காலத்தில் கல்வித்துறையில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பயற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் 200 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட இருக்கிறது. 152 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட இருக்கிறது.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.