உத்தமபாளையம்: சின்னமனூர், உத்தமபாளையம் பகுதி இரண்டாம் போக நெல் வயல்களில் வைக்கோல் சேகரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை நீர் மூலம் இரண்டு போக சாகுபடி நடைபெற்று வருகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளான லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை 14ஆயிரத்து 707ஏக்கர் நிலங்கள் பலன்பெற்று வருகிறது. தற்போது இரண்டாம் போக சாகுபடிக்கான அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதற்காக இயந்திரங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. நெல்மணிகளை சேகரித்து களத்து மேட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. எஞ்சியுள்ள வைக்கோல்கள் வயல்களிலே கிடக்கின்றன. இவை தற்போது 25கிலோ கிலோ கொண்ட கட்டுக்களாக சேகரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ''ஒரு ஏக்கருக்கு 30கட்டு வைக்கோல்கள் கிடைக்கும். 25கிலோ கொண்ட ஒரு கட்டு ரூ.200க்கு விலை போகும். இதில் டிராக்டர் செலவு, ஏற்றுக்கூலி என்று பகுதிக்கு மேல் செலவாகி விடும். இருப்பினும் நெல் விவசாயத்தில் இது உபரிவருமானமாக கை கொடுத்து வருகிறது'' என்றனர்.
இந்த வைக்கோல்கள் உள் மாவட்டம் மட்டுமல்லாது கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.