சுட்டெரிக்கும் வெயிலால் ஓடையாக மாறிய காவிரி ஆறு: தவிக்கும் வன விலங்குகள்!


ஒகேனக்கல்: சுட்டெரிக்கும் வெயிலால் ஓடைபோல காவிரி ஆறு மாறியுள்ளது. மேலும், கோடையில் ஆறு வறண்டு வன விலங்குகளுக்கு நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கர்நாடகா மாநில அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து தமிழகத்துக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனச்சரகம் பிலிகுண்டுலு பகுதியில் நுழைந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. இப்பயணத்தில் காவிரியின் ஒரு கரை தமிழக வனப்பகுதியும், மறுகரை கர்நாடக வனப்பகுதியும் உள்ளது. இந்த வனப்பகுதியில் உள்ள யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகளுக்குக் காவிரி ஆறு நீர் ஆதாரமாக உள்ளது.

இந்நிலையில், தமிழக, கர்நாடகா காவிரி வனப்பகுதியில் வெயில் வாட்டி வரும் நிலையில், ஆற்று படுகை வறண்ட நிலையும், காவிரியில் நீர்வரத்தும் குறைந்துள்ளது. மேலும், கர்நாடக மாநில அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீரும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கரைபுரண்டு ஓடும் காவிரி ஆறு, ஓடையாக மாறியுள்ளது. இதனால், காவிரி நீர்ப்பரப்பு முழுவதும் பாறைகள் வெளியில் தெரிந்து வருகிறது.

இது தொடர்பாக வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது: கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழக-கர்நாடக மாநில எல்லையான உகினியம் அருகே தொப்பகுழி வழியாக நுழைந்து அங்கிருந்து ராசிமணல் வழியாக ஒகேனக்கல் செல்கிறது. தெப்பகுழி முதல் பிலிகுண்டுலு வரையில் சுமார் 50 கி.மீ தூரம் அஞ்செட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்குள்ள வன உயிரினங்கள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தும் காவிரி ஆற்று நீரை நம்பி உள்ளது.

தற்போது, கோடைக்கு முன்னரே காவிரி ஆறு வறண்டு சிறு ஓடைபோல மாறியுள்ளது. வரும் நாட்களில் கோடை வெயில் அதிகரிக்கும்போது, ஆற்றில் தண்ணீர் முற்றிலும் நின்று விடும். இதனால், வன உயிரினங்களுக்குத் தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும். இதனிடையே, கர்நாடகா அரசு வனப்பகுதியில் ஆங்காங்கே சிறிய தடுப்பணைகளை அமைத்து காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு சென்று வன உயிரினங்களைப் பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில், கோடையில் காவிரி வறண்டு தமிழக வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வன விலங்குகளைப் பாதுகாக்கும் வகையில், கோடை காலத்தில் கர்நாடகா அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

x