ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை, பொது நூலக இயக்கம், கலை இலக்கிய ஆர்வலர் சங்கம் இணைந்து நடத்தும் 'முகவை சங்கமம்' எனும் 7வது புத்தகத் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை துவங்குகிறது.
ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைக்கிறார். ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தொடங்கி வைக்கிறார். கலை இலக்கிய ஆர்வலர் சங்கத்தின் தலைவர் சின்னத்துரை அப்துல்லா, மாநிலங்களவை உறுப்பினர் தர்மர், மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி, எம்.எல்.ஏக்கள் காதர் பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், கருமாணிக்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மானுடப்பிரியன், பாலபாரதி, பாரதிகிருஷ்ணகுமார், சுரேஷ், சுகுணா திவாகர், மனுஷ்யபுத்திரன், ராமலிங்கம், மதிவதினி, காளிஸ்வரன் உள்ளிட்ட எழுத்தாளர்கள், அறிஞர்கள், கவிஞர்களும் இந்த புத்தகத் திருவிழாவில் உரையாற்ற உள்ளனர். இந்த விழாவில் 80க்கும் மேற்பட்ட அரங்குகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன. மார்ச் 30 வரையிலும் நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு ஓவியம், ஓலை மடிப்பு, பேச்சுக்கலை, கதை சொல்லுதல், பொம்மை செய்தல், காகித மடிப்பு, நாடகம் உள்ளிட்ட பயிற்சி பட்டறைகள் நடைபெறுகிறது.