சென்னை: அமைச்சர் சேகர்பாபு என்னை ஒருமையில் பேசினார். என்னைப்பற்றி முதல்வர் சொன்னது வருத்தமளிக்கிறது என தவாக தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். முன்னதாக, வேல்முருகன் அதிக பிரசங்கித்தனமாக நடந்து கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று அரசுத் தேர்வுகளில் தமிழ்மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்பது குறித்து சட்டமன்ற உறுப்பினர் கேள்வியெழுப்பினார். அந்த கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக பேரவைத் தலைவர் அறிவித்தார். தனது கருத்துகள் நீக்கப்பட்டதற்கு எதிராக இருக்கையிலிருந்து எழுந்து வந்து வேல்முருகன் குற்றச்சாட்டுகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினார்.
இதனை தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘ வேல்முருகன் அவையின் மாண்பை மீறி வேல்முருகன் நடந்து கொள்வது வேதனையளிக்கிறது. சில நேரங்களில் வேல்முருகன் அதிகபிரசங்கித் தனமாக நடந்துகொள்கிறார்.எதிர் கருத்துகளாக இருந்தாலும் சரியாக தெரிவிப்பவர், இன்று இருந்த இடத்தைவிட்டு எழுந்து வந்து மாண்பை குறைத்து பேசுவது ஏற்புடையதல்ல. எனவே அவர் தன்னை திருத்துக்கொள்ளும் விதமாக அவர் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேல்முருகன் அவையில் ஒருமையில் பேசியதையும், கை நீட்டி பேசியதையும் சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சட்டப்பேரவைக்கு வெளியே வந்து விளக்கமளித்த வேல்முருகன், ‘அரசின் தேர்வுகளை தமிழ் படிக்காதவர்கள்கூட எழுதலாம் என ஓபிஎஸ் ஆட்சியில் திருத்தம் செய்யப்பட்டது. அதனை மாற்றுமாறு கோரிக்கை வைத்தேன். அதை அவை குறிப்பில் இருந்து நீக்கி விட்டார்கள் சபாநாயகர் இருக்கை முன்பு நின்று பேச அனுமதி கேட்டது தவறா?. பேச அனுமதி கேட்ட என்னை அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசினார். நான் என்ன பிரச்சினையை பேச வருகிறேன் என்றே தெரியாமல் அதிமுக - திமுகவினர் கூச்சல் இடுகின்றனர்.
அமைச்சர் சேகர்பாபு தவறான தகவலை முதல்வருக்கு சொல்லிவிட்டார். அதனை அப்படியே முதல்வர் தெரிவித்தது வருத்தமளிக்கிறது. சேகர்பாபு அதிமுகவை காப்பாற்ற என்னை விமர்சனம் செய்கிறார். என் தாய்மொழி குறித்து பேச வாய்ப்பு தரப்படவில்லை என்றால் பாய்ண்ட் ஆப் ஆர்டர் எழுப்பி நேரம் கேட்க எனக்கு உரிமை இருக்கிறது. தமிழுக்கு ஒரு கேடு என்றால் என் உயிரையும் தியாகம் செய்வேன்” என்றார்